

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர் செதேஷ்வர் புஜாரா இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இலங்கை அணியுடன் நாக்பூர், விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் சதம் விளாசிய புஜாரா, நான்காவது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இதே டெஸ்டில் இரட்டை சதம் விளாசி சாதனை படைத்த கேப்டன் விராட் கோலி தொடர்ந்து 5-வது இடத்தில் நீடிக்கிறார். எனினும் அவரது தரப்புள்ளிகள் 817ல் இருந்து 877 புள்ளிக்கு அதிகரித்துள்ளது.
ஆஸி. கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். இங்கிலாந்தின் ஜோ ரூட், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஒரு இடம் பின்தங்கி 3வது மற்றும் 4வது இடங்களில் உள்ளனர்.
நாக்பூர் டெஸ்டில் சதம் விளாசிய தொடக்க வீரர் முரளி விஜய் 8 இடங்கள் முன்னேறி 28-வது இடத்தையும், ரோகித் ஷர்மா 7 இடங்கள் முன்னேறி 46-வது இடத்தையும் பிடித்தனர். லோகேஷ் ராகுல் ஒரு இடம் பின்தங்கி 9-வது இடத்தையும், ரகானே 2 இடம் பின்தங்கி 15-வது இடத்தையும் பிடித்தனர்.