தமிழ் மக்கள் அறிவதற்காக ஜெயலலிதா வீடியோ வெளியிடப்பட்டது: புகழேந்தி

தமிழர்கள் மட்டுமல்லாமல், உலகம் எங்கும் உள்ள தமிழர்கள் ஜெயலலிதா பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது என தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறினார்.
தமிழ் மக்கள் அறிவதற்காக ஜெயலலிதா வீடியோ வெளியிடப்பட்டது: புகழேந்தி
Published on

தினகரன் ஆதரவாளர் புகழேந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா போயஸ் கார்டனில் இருந்து சென்றபோது அவரது உயிரற்ற உடல்தான் சென்றது என்றும், அவரை கொன்று விட்டதாகவும், அவதூறு பரப்பினார்கள்.

அவரது இரண்டு கால்களையும் எடுத்து விட்டார்கள் என்றும், விரலை வெட்டி விட்டார்கள் என்றும், தவறாக சிலர் பேசினர். ஜெயலலிதாவை சசிகலா குடும்பத்தினர் கொன்று விட்டார்கள் என்றும் தவறான தகவல்களை பரப்பினார்கள். இதையெல்லாம் தாங்கி கொண்டுதான் நாங்கள் அரசியல் நடத்தி வந்தோம்.

ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்ற போது எடுத்த வீடியோவை வெற்றிவேல் வெளியிட்டு உள்ளார். ஏற்கனவே இந்த வீடியோவை வெளியிட அனுமதி தாருங்கள் என்று சிறையில் உள்ள சசிகலாவிடமும், எங்கள் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனிடமும் கேட்டோம். அப்போதெல்லாம் அவர்கள் இதை வெளியிட மறுத்து விட்டனர்.

இன்று வெற்றிவேல் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இடைத்தேர்தலுக்காக இந்த வீடியோ வெளியிடப்படவில்லை. ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் வெற்றி பெறுவார்.

இடைத்தேர்தலை விடுங்கள். ஆனால், எங்கள் மீதும், சசிகலா குடும்பத்தினரும் மீதும் சுமத்திய அவதூறுகளை கலையும் நோக்கத்தோடு இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக வெளியிடப்படவில்லை. தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் மட்டுமல்லாமல், உலகம் எங்கும் உள்ள தமிழர்கள் ஜெயலலிதா பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ வெளியிடப்பட்டது மூலம் மக்களின் சந்தேகங்கள் அனைத்திற்கும் விடை காணப்பட்டுள்ளது. இனிமேலாவது ஜெயலலிதா மற்றும் சசிகலா பற்றி அவதூறு பரப்பிய ஆளுங்கட்சியினர் திருந்திக் கொள்ள வேண்டும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com