புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்

மீன்பிடி தடைக்காலம் முடிந்ததையடுத்து புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் இன்று அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
கோட்டைப்பட்டினம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற போது எடுத்தப்படம்.
கோட்டைப்பட்டினம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற போது எடுத்தப்படம்.
Published on

திருச்சி:

தமிழ்நாடு கடல் மீன் பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் கடல்பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு கடலில் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாட்டின் கிழக்கு கடல் பகுதிகளில் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் 14ந்தேதி வரை 61நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டது.

இதன்படி இந்த ஆண்டிற்கான மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி தொடங்கியது. நேற்று நள்ளிரவு 12 மணியுடன் இந்த தடைக்காலம் முடிவடைந்தது. இதையடுத்து மீனவர்கள் இன்று அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் ஆகிய 2 விசைப்படகு மீன்பிடி தளங்களிலும் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் 2000 மீனவர்கள் கடலில் மீன்பிடித்து வந்தனர்.

தடைகாலத்தில் விசைப்படகுகளை கடற்கரை ஓரங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்து மராமத்து பணிகளை மேற்கொண்டனர். படகுகளை சீரமைத்தல், வர்ணம் பூசுதல், படகுகளில் உள்ள இரும்பு கம்பிகளில் உப்பு காற்றினால் ஏற்பட்டுள்ள பழுதினை வெல்டிங் வைத்து சரிசெய்தல், பலகைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணியுடன் மீன்பிடி தடைக்காலம் முடிந்ததையடுத்து புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் இன்று அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இதுகுறித்து விசைப்படகு மீனவர்கள் கூறியதாவது:-

மீன்பிடி தடைக்காலத்தில் படகு, வலைகளை சீரமைத்து கொள்வது வழக்கம். ஆனால் இம்முறை கஜா புயலால் பெரும்பாலான படகுகள் சேதம் அடைந்திருந்ததால் அதிக தொகை செல விட்டு சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே 45 நாட்களாக இருந்த தடைகாலம் தற்போது 61 நாட்களாக நீட்டிக்கப்பட்டது. 2 மாதங்களுக்கு பிறகு இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்வதால் அதிக மீன்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

இது குறித்து மீன்வளத் துறை உதவி இயக்குனர் குமரேசன் கூறுகையில், ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினத்தில் மொத்தம் உள்ள 481 விசைப்படகுகளும் கடந்த மே மாதம் 31-ந்தேதி மீன்வளத்துறை மூலம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் தடை செய்யப்பட்டுள்ள வலைகளை பயன்படுத்தக் கூடாது. எல்லை தாண்டி மீன்பிடிக்க கூடாது என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com