

வார விடுமுறையையொட்டி புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை நேற்று அதிகளவில் இருந்தது. கடற்கரை மற்றும் பூங்கா பகுதியில் சுற்றுலா ஆர்வமுடன் சுற்றி பார்த்தனர். சில சுற்றுலா பயணிகள் ஆர்வ மிகுதியில் கடலில் இறங்கி குளித்தனர்.
புதுச்சேரியில் கடலில் குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது. எச்சரிக்கையையும் மீறி சுற்றுலா பயணிகள் கடலில் குளித்தனர்.
புதுச்சேரி கடற்கரையில் தலைமை செயலகம் எதிரே இருந்து பாண்டி மெரினாவரையில் 25-க்கும் மேற்பட்ட லைப் கார்டு வீரர்கள் (மீட்பு வீரர்கள்) பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடற்கரைகளில் காவல் துறை சார்பில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும், சுற்றுலா பயணிகள் மற்றும் போதை நபர்கள் ஆர்வமிகுதியில் தடையை மீறி கடலில் இறங்கி குளிப்பதை வழக்கமாக இருந்து வருகிறது. இதனை தடுத்து எச்சரித்து வெளியேற்றும் பணியில் இந்த லைப்கார்டு வீரர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதுபோல் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கு போது சில நேரங்களில் லைப்கார்டு வீரர்களுடன் தகராறில் ஈடுபடும் சம்ப வங்களும் நடக்கிறது.
இந்நிலையில் புதுச்சேரி கடல் நேற்று வழக்கத்தை விட சீற்றமாக இருந்தது. கடல் காற்றும் அதிகமாக காணப்பட்டது. ஆனால் ஆபத்தை உணராமல் செயற்கை மணல் பரப்பு, காந்தி சிலை, பாண்டி மெரினா கடலில் பலரும் உற்சாகத்தில் குளித்தனர்.
லைப்கார்டு வீரர்கள் எச்சரித்தாலும் அவர்கள் வெளியே வராமல் தொடர்ந்து குளித்தனர். பின்னர் கடுமையாக எச்சரித்த பிறகே ஒருவழியாக அவர்களை வெளியேற்ற முடிந்தது. சுற்றுலா பயணிகள் மற்றும் போதை ஆசாமிகளின் இந்த அட்டகாசத்தால் லைப்கார்டு வீரர்கள் திணறினர்.