

புதுவையில் 2 தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்-அமைச்சர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
தட்டாஞ்சாவடி தொகுதிக்கு இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை எதிர்த்து இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் மாநில தலைவர் வைத்திலிங்கம், தவெக கூட்டணியில் நேயம் மக்கள் கழகம் சார்பில் விநாயகம் ஆகியோர் போட்டியிட்டனர். இடைத்தேர்தலில் ஆளும் கட்சியான என்ஆர்.காங்கிரஸ் மீண்டும் போட்டியிட உள்ளது.
அதேநேரத்தில் தேர்தலுக்கு பிறகு அரசியல் கட்சிகளின் கூட்டணியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தவெகவுக்கு இடம்பெயர்ந்துள்ளது. இதனால் தட்டாஞ்சாவடி தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் அல்லது தவெக போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் திமுகவும் இத்தொகுதியில் களம் இறங்க உள்ளது.
தட்டாஞ்சாவடி தொகுதி முதல்-அமைச்சர் ரங்கசாமியின் சொந்த தொகுதி. கடந்த 1991 முதல் தொடர்ந்து ரங்கசாமி வசம் இருந்து வருகிறது. ரங்கசாமி காங்கிரசில் இருந்தபோதும், அவர் என்ஆர்.காங்கிரஸ் கட்சி தொடங்கிய பிறகும் அவர் நிறுத்தும் வேட்பாளர்களே தட்டாஞ்சாவடி தொகுதியில் வெற்றி பெற்று வருகின்றனர்.
2016ல் தனித்து போட்டியிட்ட ரங்கசாமி ஆட்சியை இழந்தார். அப்போது என்ஆர்.காங்கிரசுக்கு 8 எம்எல்ஏக்கள் இருந்தனர். தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற என்ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ அசோக்ஆனந்த் சொத்து குவிப்பு வழக்கு காரணமாக தனது பதவியை இழந்தார். இதனால் இடைத்தேர்தல் நடந்தது.
இடைத்தேர்தலில் திமுக போட்டியிட்டது. திமுக வேட்பாளராக களம் இறங்கிய வெங்கடேசன் என்ஆர்.காங்கிரஸ் வேட்பாளரை விட 5 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
2024ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் தட்டாஞ்சாவடி தொகுதியில் காங்கிரஸ், திமுக கூட்டணி வேட்பாளராக போட்டியிட்ட வைத்திலிங்கம் எம்பி கூடுதலாக கணிசமான வாக்குகளை பெற்றார்.
நடந்த முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் திமுகவுக்கு எதிராக வேட்பாளர்களை களம் இறக்கியது. இதனால் கூட்டணியே கலகலத்து போனது. ஆனாலும் திமுக 5 தொகுதிகளில் தற்போது வெற்றி பெற்றுள்ளது. புதுவையின் திமுகவின் வலுவை நிரூபிக்கும் வகையில் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட திமுக விரும்புகிறது.
இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து புதுவை மாநில திமுக அமைப்பாளர் சிவா பேசியுள்ளார். அப்போது, புதுவையில் யாரை வேட்பாளராக நிறுத்தினால் வெற்றி வாய்ப்பு இருக்கும் என்பது குறித்து ஸ்டாலின் கேட்டறிந்துள்ளார். இதனால் தேர்தலுக்கு முன்பாகவே தட்டாஞ்சாவடி தொகுதியில் தேர்தல் பணிகளை திமுக தொடங்கும் என தெரிகிறது.