ரூ.8.84 கோடி சம்பள பணம் அபேஸ்: சென்னை, மேற்கு வங்க வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தை மாற்றி மோசடி செய்த கும்பலுக்கு வலை வீச்சு

பணம் மாயமானது குறித்து அறிந்த கவர்னர் கைலாஷ்நாதன், சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன், வங்கியின் மண்டல மேலாளர் நித்தியானந்தம், கிளை மேலாளர் அசோக்குமார் ஆகியோரை லோக்நிவாஸ் அழைத்து விசாரித்தார்.
பணம்
Published on: 
Summary

புதுவை பல் மருத்துவ கல்லூரி வங்கி கணக்கில் இருந்த ரூ.8.84 கோடி சைபர் கிரைம் கும்பலால் ஹேக் செய்யப்பட்டு மாயமானது. போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து ரூ.40 லட்சத்தை முடக்கினர். கவர்னர் உத்தரவின் பேரில் சம்பள பணம் மீட்கப்பட்டு, தீபாவளிக்கு முன் ஊழியர்களுக்கு வழங்கப்படும் என உறுதி செய்யப்பட்டது.

புதுவை கோரிமேட்டில் மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவ கல்லூரி உள்ளது.

தனியார் வங்கியில் கணக்கு

இந்த கல்லூரி வங்கி கணக்கு இந்திராகாந்தி சதுக்கம் அருகே உள்ள தனியார் வங்கியில் உள்ளது. கூட்டுறவு சங்கம் மூலம் இயங்கும் கல்லூரியில் பணியாற்றும் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு 3 மாதமாக சம்பளம் வழங்கவில்லை.

தீபாவளியை முன்னிட்டு 3 மாத சம்பளம் வழங்க ஒப்புதல் பெறப்பட்டது. இதற்காக ரூ.8 கோடி அரசு கருவூலம் மூலம் பல் மருத்துவ கல்லூரி வங்கி கணக்கிற்கு நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு அனுப்பப்பட்டது. ஏற்கனவே இருந்த தொகையுடன் சேர்த்து ரூ.8.84 கோடி வங்கி கணக்கில் பணம் இருந்தது.

மாயம்

ஆனால் இந்த மொத்த பணமும் 9 மணிக்கு திடீரென மாயமானது. வங்கி கணக்கை ஹேக் செய்து சைபர் கிரைம் கும்பல் ரூ.8.84 கோடியை கொள்ளையடித்துள்ளனர். இதுகுறித்து கல்லூரி டீன் கென்னடிபாபு இரவு 10 மணிக்கு புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். உடனடியாக செயல்பட்ட சைபர் கிரைம் போலீசார் வங்கியின் தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு எச்சரித்தனர்.

முடக்கம்

வங்கியின் நோடல் அதிகாரி உதவியுடன் விரைவாக செயல்பட்டதால் மாயமான ரூ.8.84 கோடியில் ரூ.40 லட்சத்தை முடக்கம் செய்தனர். இதேபோல சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்த தனியார் வங்கியின் கணக்குகளில் இருந்து ரூ.20 கோடி வரை சைபர் கிரைம் கும்பல் ஹேக் செய்து மோசடியாக பணம் எடுக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து புதுச்சேரி சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வர்மன் வழக்குப்பதிந்து, கல்லூரியின் நிர்வாக பிரிவில் செயல்பட்டு வந்த கணக்கு சார்ந்த 2 அறைகளை பூட்டி சீல் வைத்தார். போலீசார் விசாரணையில், மாயமான ரூ.8.84 கோடி சென்னையில் உள்ள வங்கி கணக்கு ஒன்றிற்கும், மேற்கு வங்கத்தில் உள்ள சில வங்கி கணக்கிற்கும் சென்றிருந்த தெரியவந்தது.

சைபர் கிரைம் போலீசார் உடனடியாக இதை முடக்க சென்னை விரைந்துள்ளனர்.

கவர்னர் எச்சரிக்கை

பணம் மாயமானது குறித்து அறிந்த கவர்னர் கைலாஷ்நாதன், சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன், வங்கியின் மண்டல மேலாளர் நித்தியானந்தம், கிளை மேலாளர் அசோக்குமார் ஆகியோரை லோக்நிவாஸ் அழைத்து விசாரித்தார்.

அப்போது போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் சைபர் கிரைம் கும்பல் வங்கி கணக்கை ஹேக் செய்து அரசு ஊழியர்களுக்கு பணம் வந்த சிறிது நேரத்தில் அதனை மோசடியாக எடுத்தது தெரியவந்தது.

இதனால் அந்த பணத்துக்கு வங்கி நிர்வாகம்தான் பொறுப்பேற்க வேண்டும். உடனடியாக சம்பள பணத்தை கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என கவர்னர் உத்தரவிட்டார். வங்கி நிர்வாகமும் பணத்தை வங்கியின் மூலம் ஒப்படைப்பதாக உறுதியளித்தனர்.

சைபர் கிரைம் போலீசார் பணத்தை மீட்ட உடன் வங்கி நிர்வாகத்திடம் ஒப்படைக்க கவர்னர் அறிவுறுத்தினார். கவர்னரின் இந்த உத்தரவால் 3 மாத சம்பளம் தீபாவளிக்கு முன்பு கிடைக்கும் என பல் மருத்துவ கல்லுாரி ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

X