

புதுச்சேரியில் அக்டோபர் மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.179 கோடியாகக் குறைந்துள்ளது, இது கடந்த ஆண்டைவிட 7 சதவீத சரிவாகும். ஆனால் எஸ்.ஜி.எஸ்.டி. வசூலில் 7 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது, கடந்த ஆண்டு ரூ.47 கோடியில் இருந்து இந்த ஆண்டு ரூ.50 கோடியாக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் அக்டோபர் மாதத்துக்கான ஜி.எஸ்.டி. வசூல் விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இதன்படி நாட்டின் மொத்த ஜி.எஸ்.டி. வசூல் ரூ.2 லட்சத்து 31 ஆயிரத்து 290 கோடியாக பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ரூ.1லட்சத்து 88 ஆயிரத்து 125 கோடி வசூலான நிலையில் இந்த ஆண்டு 22.9 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதில் உள்நாட்டு வர்த்தகம் மூலம் கிடைத்த ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சத்து 59 ஆயிரத்து 44 கோடியாகும். இது கடந்த ஆண்டைவிட 15.8சதவீதம் அதிகமாகும். அதேபோல், இறக்குமதி மூலம் கிடைத்த ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.72 ஆயிரத்து 246 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 42.2 சதவீத வளர்ச்சியாகும்.
அக்டோபர் மாதத்தில் மொத்தம் ரூ.27 ஆயிரத்து 934 கோடி ஜி.எஸ்.டி. வரித்திருப்பு தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து வரித்திருப்பு தொகையை கழித்த பின்னரான நிகர ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.2 லட்சத்து 3 ஆயிரத்து 356 கோடியாக உள்ளது.
இது கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும் போது 25.6 சதவீதம் அதிகமாகும். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிர தேசங்களின் உள்நாட்டு ஜி.எஸ்.டி. வசூல் விவரங்களின்படி, பல மாநிலங்களில் கணிசமான வளர்ச்சி பதிவாகியுள்ளது.
இதற்கிடையே புதுச்சேரியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ரூ.191 கோடியாக இருந்த உள்நாட்டு ஜி.எஸ்.டி. வசூல், இந்த ஆண்டு ரூ.179 கோடியாகக் குறைந்துள்ளது. இதன் மூலம் 7 சதவீத சரிவு ஏற்பட்டுள்ளது.
ஆனால் புதுச்சேரியின் எஸ்.ஜி.எஸ்.டி. வசூல் கடந்த ஆண்டு அக்டோபரில் ரூ.47 கோடியாக இருந்த நிலையில் இந்த ஆண்டு ரூ.50 கோடியாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் எஸ்.ஜி.எஸ்.டி. வசூலில் 7 சதவீத வளர்ச்சி பதிவாகியுள்ளது.