

புதுச்சேரி இந்திய அளவில் சைபர்கிரைம் குற்றங்களை கண்டறிவதில் 2-வது இடத்தை பெற்றுள்ளது. ஆனால் விபத்துகளில் முதலிடத்தில் இருப்பது கவலைக்குரிய விஷயமாகும். போக்குவரத்து நெரிசல், இணையவழி குற்றம் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு திட்டங்கள் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளன.
புதுவை காவல் துறை தலைமை அலுவகத்தில் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சைபர் கிரைம், இணையவழி குற்றங்களைக் கண்டறிவதில் இந்தியாவில் 2-வது இடத்தை புதுச்சேரி யூனியன் பிரதேசம் பெற்றுள்ளது. ஆனால் விபத்து நடப்பதில் முதலிடத்தில் இருக்கிறது. இது வெட்கப்பட வேண்டிய விஷயம். குறைந்த மக்கள் தொகை உள்ள புதுவையில் இதுபோன்ற நிலை இருக்கிறது.
மேலும் சட்டம்-ஒழுங்கு, போதை பொருள், இணைய வழி குற்றம் தடுப்பு, போக்குவரத்து சரி செய்வது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
போக்குவரத்து நெரிசலைச் சரி செய்ய பொதுப்பணித்துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட சம்மந்தப்பட்ட துறைகளோடு தகுந்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு முடிவும் எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் திட்டம் அமல்படுத்தப்பட இருக்கிறது.
காவல்துறையில் பதவி உயர்வு, காலி பணியிடங்களை நிரப்புவது, 2-வது ஐ.ஆர்.பி.என். படைப்பிரிவை உருவாக்குவது போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலை பெறுவதற்கான கோப்பும் தயார் செய்யப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் சிட்டி மூலம் பொது தகவல் மையம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நகரப்பகுதியில் 22 சிக்னல்களிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
புதுவையில் கவர்னர், முதல்-அமைச்சருக்கு இடையே உறவு சிறப்பாக இருக்கிறது. விரிசல் அடைய வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் எதிர்பார்க்கின்றனர். அதனால் அவர்களின் எண்ணத்தை, ஆசையை கூறுகின்றனர். எந்தக் கோப்பு ஒப்புதல் ஆகவில்லை என்பதை குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.
ஏனாம் புயல் நிவாரணம் தொடர்பாக கவர்னர், முதல்-அமைச்சர் கலந்து முடிவு செய்து அதற்குரிய தொகையை அறிவிக்க வேண்டியது கடமை. அதைச் செய்கின்றனர். சம்மந்தப்பட்ட மக்களுக்கு அந்தத் தொகை விரைவில் கிடைக்கும்
இவ்வாறு அவர் கூறினார்.