

கொலை நடந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்.
புதுச்சேரி தவளக்குப்பம் அருகே தமிழக பகுதியான ரெட்டிசாவடி அடுத்த கரிக்கன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார் (வயது 24).
பிரவீன்குமாருக்கு திருமணமாகி ஒரு மாதமே ஆகிறது. புதுமாப்பிள்ளையான இவர் நேற்று மாலை அபிஷேக பாக்கம் சந்திப்பில் பைக்கில் தவளகுப்பம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரைப் பின் தொடர்ந்து காரில் வந்த ஒரு கும்பல் பிரவின் குமார் ஓட்டி சென்ற பைக் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி பிரவின்குமார் கீழே விழுந்தார்.
உடனே காரில் வந்த மர்ம கும்பல் பிரவின் குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. மேலும் முகத்தை குறிவைத்து வெட்டியதில் பிரவின்குமார் முகம் சிதைந்து போனது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்து போனார். அவர் இறந்ததை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகே அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.
இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் வாணரப்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி பாம் ரவி கொலை வழக்கில் பிரவீன்குமாருக்கு தொடர்பு உள்ளதால் பழிக்கு பழியாக கொலை செய்தது தெரிய வந்தது.
குடியிருப்புகளுக்கு மத்தியில் இந்த கொலை சம்பவம் நடந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தவளகுப்பம் - அபிஷேகபாக்கம் மெயின் ரோட்டில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் அரியாங்குப்பம், முதலியார்பேட்டை, கிருமாம்பாக்கம்ம மற்றும் பாகூர் பகுதி சேர்ந்த போலீஸ் அதிகாரிகளும் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர். கொலை நடந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்.