புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழையையொட்டி கட்-அவுட், பேனர்கள் வைக்க மாவட்ட ஆட்சியர் தடை!

விதிமீறும் பேனர்களை அகற்றும் செலவை மீறியவர்களே ஏற்க வேண்டும் என ஆட்சியர் எச்சரிக்கை.
Ban on banners
Published on: 
Summary

2026-ம் ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை காலம் நெருங்கி வருவதை முன்னிட்டு, புதுச்சேரியில் பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்துக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில், அனைத்து வகையான பேனர்கள் மற்றும் கட்-அவுட்டுகள் வைக்கப் புதுச்சேரி மாவட்ட நிர்வாகம் அதிரடி தடை விதித்துள்ளது.

இது தொடர்பாகப் புதுச்சேரி மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளார்.

எல் நினோ தாக்கமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும்

நடப்பு 2026-ம் ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை காலம் விரைவில் தொடங்கவுள்ளது. தற்போதைய உலகளாவிய காலநிலை மதிப்பீடுகளின்படி, 'எல் நினோ' தாக்கம் வலுவடைந்து வருகிறது. இதன் காரணமாக, வரவிருக்கும் பருவமழை காலத்தில் வழக்கத்தை விடக் கூடுதல் மழையும், பலத்த சூறாவளிக் காற்றும் வீச வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

இந்த வானிலை மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, கூடுதல் ஆயத்த மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் பேனர்கள்

சமீபத்தில் புதுச்சேரியில் தியேட்டர் அருகே பலத்த காற்று மற்றும் மழையினால் பேனர்கள் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

மோசமான வானிலையின் போது பேனர்கள் மற்றும் கட்-அவுட்டுகள் சரியாகக் கட்டப்படாவிட்டால், அவை காற்றில் பறந்தோ அல்லது சரிந்து விழுந்தோ பொதுமக்களின் உயிருக்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கக்கூடும்.

அதிரடித் தடை உத்தரவு

பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள பொது இடங்கள், தனியார் இடங்கள், சாலை ஓரங்கள் மற்றும் சாலைத் தடுப்புகள் ஆகிய எவ்விடத்திலும் அனைத்து வகையான பேனர்கள் மற்றும் கட்-அவுட்டுகள் வைக்க முற்றிலுமாகத் தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.

அகற்றாவிட்டால் கடும் நடவடிக்கை

ஏற்கனவே வைக்கப்பட்டிருக்கும் பேனர்கள் மற்றும் கட்-அவுட்டுகளை சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக அகற்ற வேண்டும். இதனை எவ்வித முன்அறிவிப்பும் இன்றி அகற்றுவதற்காக நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள், பொதுப்பணித்துறை, போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அனைத்து போலீஸ் நிலைய அதிகாரிகள் அடங்கிய சிறப்பு அதிரடிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

விதிமீறி வைக்கப்படும் பேனர்களை அதிகாரிகள் அகற்றும் போது, அதற்கான முழுச் செலவும் விதிமீறலில் ஈடுபட்ட நபர்களிடமிருந்தே வசூலிக்கப்படும். இந்தத் தடை உத்தரவு 2026 வடகிழக்குப் பருவமழை காலம் முடியும் வரையோ அல்லது மறு உத்தரவு வரும் வரையோ அமலில் இருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் எச்சரித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com