ரூ.2½ கோடி கடன் வாங்கி மோசடி: சென்னை பெண், கோவில் அர்ச்சகருக்கு 5 ஆண்டு ஜெயில்

வழக்கு விசாரணை புதுச்சேரி தலைமை குற்றவியல் கோர்ட்டில் நீதிபதி யஸ்வந்த் ராவ் இங்கர்சல் முன்னிலையில் நடந்தது.
சிறை தண்டனை
சிறை தண்டனை
Published on

புதுச்சேரி முத்தியால்பேட்டை சின்னையாபுரம் அக்கா சுவாமி மடத்து வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணன்(வயது27). புதுச்சேரி பஸ் நிலையம் எதிரே உள்ள உலகநாயகி அம்மன் கோவில் அர்ச்சகர். இவர், கடந்த 2020-ம் ஆண்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களிடம், சென்னையை சேர்ந்த ரமா (63) என்பவர், தனக்கு குடிசை மாற்று வாரியத்தில் கடன் வாங்கி தருவதாக கூறியுள்ளார்.

2 ½ கோடி கடன்

எனவே அவருக்கு பணம் தர வேண்டும் என கூறியுள்ளார். அதை நம்பிய பக்தர்கள் 30-க்கும் மேற்பட்டோரிடம் ரூ. 2½ கோடி வரை வாங்கியுள்ளார். இந்நிலையில், கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்ட போது, வங்கி கடன் வாங்குவதற்காக சென்னையை சேர்ந்த ரமா மற்றும் சபரிநாதன், மகாலட்சுமி ஆகியோரிடம் ரூ.2½ கோடியை கொடுத்துவிட்டேன் என கூறியதுடன், கடன் கொடுத்தவர்களை நம்ப வைப்பதற்காக சி.பி.சி.ஐ.டி., போலீசிலும், இருவர் மீது மோசடி புகார் அளித்தார்.

மோசடியில் தொடர்பு

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பாபுஜி மோசடி வழக்கு பதிவு செய்து மகாலட்சுமி, சபரிநாதன் ஆகியோரை கைது செய்து விசாரித்ததில், கிருஷ்ணனுக்கும் இந்த மோசடியில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அதையடுத்து, கிருஷ்ணனும் வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி தலைமை குற்றவியல் கோர்ட்டில் நீதிபதி யஸ்வந்த் ராவ் இங்கர்சல் முன்னிலையில் நடந்தது. விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் ரமா, கிருஷ்ணன் ஆகியோருக்கு 406 ஐ.பி.சி.யின் கீழ் 3 ஆண்டு ஜெயில் தண்டனை, 420 ஐ.பி.சி.,யின் கீழ் 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் ரமாவுக்கு ரூ.50 லட்சம் அபராதம், கிருஷ்ணனுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் சபரிநாதன் தலைமறைவாகிவிட்டார். அவருக்கு பிடிவாராண்ட் பிறப்பிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com