

தனி நபர் வருமானத்தில் இந்தியாவில் புதுச்சேரி 2-வது இடத்தில் உள்ளது. முதலிடத்துக்கு வர அனைத்து நிலையிலும் நாம் உயர வேண்டும்.
மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம், புதுச்சேரி தொழில் மற்றும் வணிகத்துறை சார்பில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை பயன்படுத்துவது குறித்த பயிலரங்கம் தனியார் ஓட்டலில் நடைபெற்றது.
பயிலரங்கத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
புதுவையில் தொழில் வளர்ச்சி சிறந்த முறையில் இருந்து வருகிறது. சில பெரிய தொழில் நிறுவனங்கள் வருவார்கள், போய்விடுவார்கள். ஆனால் குறு, சிறு தொழில் நிறுவனங்கள் புதுச்சேரியில் தொடர்ந்து இயங்குகின்றன.
இந்த நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தொழிற்பேட்டை உருவாக்க நிறைய இடங்கள் தேவை. சேதராப்பட்டு, கரசூர் இடம் 10 ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தப்பட்டது. அங்கு சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். விரைவாக அங்குள்ள 750 ஏக்கர் நிலத்தில் புதிய தொழிற்பேட்டையை உருவாக்க வேண்டும்.
புதுச்சேரியில் உற்பத்தியாகும் பொருட்கள் ஏற்றுமதிக்கு தகுதியானவையாக இருக்கின்றன. நிறைய ரசாயன பொருட்கள், மருந்து வகைகள், பிளாஸ்டிக் போன்ற பொருட்களை தயார் செய்து ஏற்றுமதியால் நமக்கு ரூ.5 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது மேலும் வளர வேண்டும்.
தொழில் தொடங்க வருவோருக்கு விரைவாக அனுமதி கொடுக்க வேண்டும் என்பது எனது எண்ணம். ஒற்றை சாளர முறை என்று சொல்கிறோம். ஆனால் அனுமதி கேட்டு வருவோருக்கு அரசு சங்கடத்தை ஏற்படுத்தி அலைக்கழிப்பதாகக் கூறுகின்றனர்.
அவர்களுக்கு தேவையான உதவிகளை அனைத்து துறைகளும் செய்து கொடுக்க வேண்டும். படித்து முடித்த இளைஞர்கள் புதிய தொழில் தொடங்க முயல வேண்டும். அதற்கும் அரசு உறுதுணையாக இருக்கும்.
தனி நபர் வருமானத்தில் இந்தியாவில் புதுச்சேரி 2-வது இடத்தில் உள்ளது. முதலிடத்துக்கு வர அனைத்து நிலையிலும் நாம் உயர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.