நாளை தீபாவளி பண்டிகை: புதுவையில் பாதுகாப்பு பணியில் 1,000 போலீசார்

வருகிற 9-ந்தேதி வரை போக்குவரத்து மாற்றம் மற்றும் கட்டுப்பாடுகள் அமலாகியுள்ளது.
புதுச்சேரி
புதுச்சேரி
Published on: 

புதுச்சேரியில் தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது.

கூட்டம் அலைமோதல்

இதையொட்டி பொது மக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக கடை வீதிகளில் குவிந்து வருகின்றனர். இதையடுத்து, புதுவை டி.ஜி.பி. ஷாலினி சிங் உத்தரவின்பேரில், முக்கிய பகுதிகளில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

1000-ம் போலீசார் பாதுகாப்பு

குறிப்பாக நேரு வீதி, காந்தி வீதி, அண்ணா சாலை, காமராஜர் வீதி உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், திருட்டு உள்ளிட்ட குற்றறச் சம்பவங்களைத் தடுக்கவும் 1000-ம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் நள்ளிரவு 12 மணி வரை சிறப்பு ரோந்து பணி, வாகன சோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் சிட்டி சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து புதுச்சேரி சட்டம் ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு கலைவாணன் கூறியதாவது:-

தீபாவளியை முன்னிட்டு புதுவை முழுவதும் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து,

ஐ.ஆர்.பி.என். மற்றும் ஊர்க்காவல் படையினர் என 1000-ம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வருகிற 9-ந்தேதி வரை போக்குவரத்து மாற்றம் மற்றும் கட்டுப்பாடுகள் அமலாகியுள்ளது.

புதிய பஸ் நிலையத்தில் இருந்து வரும் வாகனங்கள், கிழக்குக் கடற்கரை சாலையில் இருந்து வரும் வாகனங்களுக்கான வழித்தடங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

வாகனங்களுக்கு தடை

அண்ணா சதுக்கம் முதல் 45 அடி சாலை சந்திப்பு வரையிலான அண்ணா சாலைப் பகுதியிலும், பட்டாணிக்கடை சந்திப்பு முதல் ஜி.ஆர்.டி. சந்திப்பு வரையிலான காமராஜர் சாலைப் பகுதியிலும் 9-ந்தேதி மாலை 4 மணி வரை அனைத்து வகை கனரக வாகனங்களும் செல்லத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கூடும் கூட்ட நெரிசலைப் பொருத்து நேரு வீதியில் வாகனங்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்படும். செட்டி தெரு, நீடராஜப்பர் வீதி வரையிலான சின்னசுப்புராய பிள்ளை வீதி, பாரதி வீதி மற்றும் மகாத்மா காந்தி சாலை பகுதிகளில் தினமும் காலை 9.30 மணி முதல் இரவு 11 மணி வரை இருசக்கர வாகனங்களைத் தவிர மற்றற அனைத்து வகையான வாகனங்களும் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

கட்டுப்பாட்டு அறை

சந்தேகத்துக்கிடமான நபர்கள் அல்லது பொருட்கள் தென்பட்டால், உடனடியாக அருகிலுள்ள காவல்துறையினரையோ, கட்டுப்பாட்டு அறை அவசர உதவி எண் 112 மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தயார் நிலையில் தீயணைப்பு வீரர்கள்

புதுவை தீயணைப்பு துறை கோட்ட அதிகாரி இளங்கோ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பட்டாசு வெடிக்கும்போது குழந்தைகளுக்கோ அல்லது பெரியவர்களுக்கோ தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக அந்த இடத்தில் குளிர்ந்த நீரை வெப்பம் தணியும் வரை ஊற்ற வேண்டும். பின்னர் அந்த இடத்தை மெல்லிய பருத்தி துணியால் மூடி, பாதிக்கப்பட்டவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வேண்டும்.

‘பட்டாசு கடைகளில் தீயணைப்புத்துறை சிபாரிசு செய்த தீயணைப்புச் சாதனங்களைச் சரியான முறையில் வைத்துப் பராமரிக்க வேண்டும். புதுவையில் 9 இடங்களில் தீயணைப்பு நிலையங்கள் மற்றும் ஒரு கட்டுப்பாட்டு அறையும் செயல்படுகின்றன.

இந்த நிலையங்களில் தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு அழைப்புக்காக நீர்தாங்கி வண்டிகளுடன் 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளனர்.

மேலும் பொதுமக்களின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு தீயணைப்பு வாகனம் அரியாங்குப்பம் போலீஸ் நிலைய வளாகத்தில் தயார் நிலையில் தற்காலிகமாக நிறுத்தப்படும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

X