புதுச்சேரி தொழிலதிபரிடம் இரட்டிப்பு பணம் தருவதாக மோசடி: தலைமறைவான தம்பதி கேரளாவில் கைது

வழக்கில் இதுவரை 12 பேரை கைது செய்த போலீசார் மொத்தம் ரூ.1 கோடியே 67 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது
Published on: 
Summary

புதுச்சேரி தொழிலதிபரிடம் இரட்டிப்பு பணம் தருவதாக மோசடி செய்த தம்பதியை கேரளாவில் போலீசார் கைது செய்தனர். இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டு, ரூ.1.67 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தொடர்புடைய சிலரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக செயல்படுகின்றனர்.

புதுச்சேரி, லாஸ்பேட்டையே சேர்ந்தவர் வெங்கடேஷ்.

இரட்டிப்பு பணம்

தொழிலதிபரான இவரை தொடர்பு கொண்ட கும்பல், ரூ.1 கோடி கொடுத்தால் 3 மணி நேரத்தில் பணத்தை இரட்டிப்பக்கி தருவதாக ஆசை வார்தை கூறியது.

இதை நம்பிய வெங்கடேஷ், தனது நண்பர் மகேசுடன் சென்று ரூ.2 கோடியை கடந்த மாதம் 29-ந் தேதி புதுச்சேரி டி.ஆர்.நகரில் வைத்து பார்த்தசாரதி, முகமது ரபீக் ஆகியோரிடம் கொடுத்தனர்.

பணம் பறிப்பு

அப்போது அங்கிருந்த சிலர் பணம் இருந்த பையை பறித்துக் கொண்டு தப்பினர். அதில் சிலரை மடக்கி பிடித்து, பணத்தை சரிபார்த்த போது ரூ.88 லட்சத்தை காணவில்லை. இதுகுறித்து வெங்கடேஷ் உருளையன்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் 8 பேரை போலீசார் கைது செய்து ரூ.39 லட்சத்தை பறிமுதல் செய்தனர். ரூ.49 லட்சத்துடன் தப்பியோடியவர்களை தேடி வந்தனர்.

சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

இந்நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டு, இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

கேரளாவில் கைது

இதில் பணத்தை எடுத்துச் சென்ற வில்லியனூர் கோபாலன் கடை ஸ்டாலின், (வயது30) பணத்தை வைத்திருந்த புதுச்சேரி பெரியார் நகர் வக்கீல் சிகாமணி (36) ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய அறிவுமணி, (45) அவரது மனைவி சித்ராதேவி, (43) ஆகியோர் தலைமறைவாக இருந்தனர்.

அவர்கள் கேரள மாநிலம் வயநாட்டில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலின் பேரில், தனிப்படை போலீசார் கேரளா விரைந்து சென்று இருவரையும் கைது செய்த னர். அவர்களிடம் இருந்து ரூ.16 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கில் இதுவரை 12 பேரை கைது செய்த போலீசார் மொத்தம் ரூ.1 கோடியே 67 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல் செய்துள்ளனர்.

வழக்கில் தொடர்புடைய சென்னையை சேர்ந்த ரோஷலின், திருவண்ணாமலையை சேர்ந்த ஒருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com