

தாயாரின் பூர்வீக அடிப்படையில் சாதி சான்றிதழ்களை வழங்க வேண்டும் என்று புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் பிறந்து, வளர்ந்த குழந்தைகளின் தாயார் புதுச்சேரியை பூர்வீகமாக கொண்டவராக இருந்தாலும், அவர்களது தந்தை வெளிமாநிலத்தைச் சேர்ந்தராக இருந்தால், தாயாரின் சாதி அடிப்படையில் சாதி சான்றிதழ் மறுக்கப்பட்டது.
சிலருக்கு புலம்பெயர்ந்தோர் என சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனால் தங்களுக்கான புதுச்சேரி அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டு பலன்களை பெற முடியவில்லை எனக்கூறி பாதிக்கப்பட்ட 28 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகளை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்குகள் விசாரணை நீதிபதி டி.பரதசக்ரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “புதுச்சேரியை பூர்வீகமாக கொண்ட தாயாரின், பூர்வீக சாதியை அடிப்படையாகக் கொண்டு அவர்களின் குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்படாததால், புதுச்சேரி அரசு வழங்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அவர்களுக்கான இடஒதுக்கீடு மறுக்கப்படுகிறது.
அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 14, 15 மற்றும் 16 அனைவருக்குமான சமத்துவத்தை உறுதி செய்கின்றன.
எனவே, சமூக அந்தஸ்தை தந்தையின் மூலம் மட்டுமே தீர்மானிக்கும் பாரம்பரியக் கருத்தை அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் தொடர்ந்து கடைப்பிடிக்க முடியாது.
எனவே, தாயாரின் பூர்வீகத்தை அடிப்படையாகக் கொண்டு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பது சட்டவிரோதமானது” என்று வாதிட்டனர்.
புதுச்சேரி அரசு தரப்பில், ‘‘ஒரு மாநிலத்தில் கிடைக்கும் சமூக அந்தஸ்து மற்றும் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டு பலன்களை புலம் பெயர்ந்தவர்கள் அப்படியே கேட்கமுடியாது.
சமூக அந்தஸ்து தந்தையின் அடிப்படையில் தான் தீர்மானிக்கப்பட்டு வருகிறது. தாயாரின் பூர்வீக அடிப்படையில் சாதி சான்றிதழ் வழங்கக்கோருவது தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன” என்று வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரியைச் சேர்ந்த ஆண் ஒருவர் வெளிமாநில பெண்ணை திருமணம் செய்து கொண்டாலும், அவர்களது குழந்தைகளுக்கு புதுச்சேரி பூர்வீகத்தின் அடிப்படையில் சாதி சான்றிதழ் மற்றும் இடஒதுக்கீட்டுப் பலன்கள் வழங்கப்படுகின்றன.
அதேநேரம், புதுச்சேரியைச் சேர்ந்த பெண் ஒருவர் வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஆண் ஒருவரை திருமணம் செய்து கொண்டால், அவர்களது குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ், இடஒதுக்கீடு வங்குவது இல்லை. இது பாலினம் அடிப்படையிலான வேறுபாடாக கருதப்படுகிறது.
இடஒதுக்கீட்டின் அடிப்படை நோக்கமே சமூகத்தில் பின்தங்கிய நிலையை சரிசெய்வதுதான். அந்த சமூக அந்தஸ்து தந்தை வழியில் வந்ததா அல்லது தாய் வழியில் வந்ததா? என்பதை தீர்மானி்ப்பது அல்ல. எனவே, புதுச்சேரியில் பாலின அடிப்படையில் சாதி சான்றிதழ் வழங்க புதுச்சேரி அரசு மறுப்பது ஏற்புடையதல்ல.
இந்த சமூகம் ஆணாதிக்க சமூகமாக இருப்பதால் தந்தை வழியாக மட்டுமே சமூக அந்தஸ்தை தீர்மானிக்க முடியும் என்ற கூற்றையும் ஏற்க முடியாது.
ஒரு பெண்ணின் அடையாளம் திருமணத்துக்குப் பிறகு கணவரின் அடையாளத்துடன் கரைந்து போய்விடக்கூடாது. பெண்களுக்கான சம உரிமையை அரசியலமைப்பு சட்டம் தந்துள்ளது.
எனவே, தந்தையின் பூர்வீக அடிப்படையில் மட்டுமே சாதி சான்றிதழ் வழங்கப்படும் என்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர்களுக்கு அவர்களின் தாயாரின் பூர்வீகத்தின் அடிப்படையில் உரிய சாதி சான்றிதழ்களை வழங்க வேண்டும்.
அந்த சாதி சான்றிதழின் அடிப்படையில் புதுச்சேரி அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அனைத்து உரிமைகளையும், இடஒதுக்கீட்டு பலன்களையும் வழங்கவேண்டும்.
அதேநேரம் தவறான கோரிக்கை முன்வைக்கப்பட்டாலோ அல்லது தாயாரின் பூர்வீகம் நிரூபிக்கப்படாவிட்டாலோ சாதி சான்றிதழ் வழங்க முடியாது என அரசு மறுப்பதற்கு இந்த உத்தரவு தடையாக இருக்காது.”
என நீதிபதி உத்தரவில் தெரிவித்தார்.