

புதுவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆனந்த், அமைச்சர் மரியவில்சன் மீதான வழக்கை முதலாவது நடுவர் மன்றத்திலிருந்து 6-வது நடுவர் மன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டார்.
தமிழக நிதியமைச்சர் மரியவில்சன் 2022-ம் ஆண்டு புதுச்சேரி எழில் நகரில் வசித்து வரும் அவரின் சகோதரர் மரிய குளோத் மற்றும் அவரின் மனைவி கெரோலினை தாக்கியதாக லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு புதுச்சேரி முதலாவது குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த நடுவர் சேரலாதன் மாகிக்கு மாற்றப்பட்டார். இதனால் இந்த வழக்கை 2-வது குற்றவியல் மன்ற நடுவர் சந்திரசேகர் விசாரித்து வந்தார்.
அமைச்சர் மரியவில்சன் தரப்பில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்கை முதலாவது நடுவர் மன்றம் தான் விசாரிக்க வேண்டும். 2-வது குற்றவியல் மன்றம் விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இதனால் வழக்கை 2-வது குற்றவியல் நடுவர் மன்றத்தில் விசாரிக்க இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மனு மீதான விசாரணை நடந்து வந்தது. மனுவை விசாரித்த புதுவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆனந்த், அமைச்சர் மரியவில்சன் மீதான வழக்கை முதலாவது நடுவர் மன்றத்திலிருந்து 6-வது நடுவர் மன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டார்.
மேலும் 6-வது குற்றவியல் நடுவர் மன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை டிசம்பர் 11-ந் தேதி நடைபெறும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனால் 6-வது குற்றவியல் நடுவர் மன்ற நடுவர் மெல்வின் தாமஸ் முன்பு அன்றைய தினம் தமிழக அமைச்சர் மீதான வழக்கு விசாரணைக்கு வருகிறது.
அமைச்சர் தரப்பில் சென்னை ஐகோர்ட்டு மூத்த வக்கீல் காஜா மொகைதீன் கிஸ்தி ஆஜராகி வாதாடினார். அரசு தரப்பில் மூத்த வக்கீல் ரபீந்திரன் ஆஜரானார்.