புதுச்சேரியில் இருந்து கேரளாவுக்கு விமான சேவை- விரைவில் தொடங்க ஏற்பாடு

உடான் விமான சேவை திட்டத்தின்கீழ் கண்ணூர், கோழிக்கோடு மற்றும் கொச்சிக்கு விமான சேவை விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
விமான சேவை
விமான சேவை
Published on: 
Summary

புதுச்சேரி கேரள சமாஜம் நடத்திய ஓணம் குடும்ப சவுஹ்ரித மேளாவில் கவர்னர் கைலாஷ்நாதன் கலந்து கொண்டு, மதம், சாதி, அரசியல் கடந்து செயல்படும் சமாஜத்தை பாராட்டினார். ஒற்றுமை, சகோதரத்துவம், நல்லிணக்கம் வலுப்படும் இந்நிகழ்வில், 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு, வில்லியனூரில் ரூ.2000 கோடி ரெயில் முனையம் திட்டம் அறிவித்தார்.

புதுச்சேரி கேரள சமாஜம் சார்பில் நடந்த ஓணம் குடும்ப சவுஹ்ரித மேளாவை கவர்னர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்து பேசியதாவது:-

ஒற்றுமைமைய வலுப்படுத்தும்

புதுச்சேரி கேரள சமாஜம் மதம், சாதி, அரசியல் கடந்து சிறப்பாக செயல்பட்டு வருவதை நான் பாராட்டுகிறேன். இது போன்ற நிகழ்ச்சிகள் நம்மிடையே ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் வலுப்படுத்துகிறது. மகிழ்ச்சி நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர ஆதரவு ஆகியவற்றை நம்மிடையே நிலைத்திருக்க செய்கிறது.

மருத்துவ காப்பீடு

மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டு திட்டங்களின் கீழ் 70 வயதிற்கும் மேற்பட்ட முதியோர்களுக்கும் மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக ரூ. 5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெற முடியும். இந்த புதிய திட்டத்தின் பலன் அனைவரையும் சென்றடையும் விதமாக பதிவு நடைமுறைகளை கேரள சமாஜம் முன்னெடுக்க வேண்டும்.

புதுச்சேரியை அடுத்த வில்லியனூரில் ஒரு ரெயில் முனையம் அமைக்க திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. அதற்காக ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்யவும் ரெயில்வே அமைச்சகம் சம்மதம் தெரிவித்திருக்கிறது.

கேரளாவுக்கு விமான சேவை

புதுச்சேரியை மாகி மற்றும் கேரள பகுதிகளோடு இணைக்கும் விமான சேவையும் பரிசீலனையில் இருக்கிறது. உடான் விமான சேவை திட்டத்தின்கீழ் கண்ணூர், கோழிக்கோடு மற்றும் கொச்சிக்கு விமான சேவை விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. புதுச்சேரி விமான நிலையத்தின் ஓடுபாதை 2500 மீட்டராக அதிகரிக்கப்படும். அதன் மூலமாக பெரிய அளவிலான சர்வதேச விமான சேவை தொடங்கப்படும். இந்த சேவைகள் புதுச்சேரியை கேரளத்துடன் இணைத்து பயனளிக்கும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு கவர்னர் கைலாஷ்நாதன் பேசினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com