அரச்சலூர் அருகே சொத்து தகராறில் தாயை அடித்துக் கொன்ற மகன்

சொத்து தகராறில் தாயை அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Published on

ஈரோடு:

அரச்சலூர் அருகே உள்ள வடுகப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் ரத்தினம்மாள் (வயது 61). இவரது மகன் பாலசுப்பிரமணி(40). விவசாயி.

தாய்-மகன் இடையே சொத்து பிரச்சினை தொடர்பாக தகராறு இருந்து வந்தது. தன் பெயருக்கு உடனே சொத்தை எழுதி வைக்க வேண்டும் என மகன் அடிக்கடி கேட்டு தொந்தரவு செய்து வந்தார்.

பாலசுப்பிரமணி தன் நகைகளை வங்கியில் அடமானம் வைத்திருந்தார். அதை எடுக்க வீட்டையும், சொத்தையும் தன்பெயருக்கு எழுதி கேட்டார். நகையை திருப்பியதும் பிறகு வீட்டை மீட்டு விடலாம் என கூறி வந்தரராம். இதற்கு தாயார் மறுத்து உள்ளார்.

தாயும், மகனும் ஓரே வீட்டில் அடுத்தடுத்த அறைகளில் வசித்து வந்தனர். மகன் அடிக்கடி சொத்து கேட்டு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் ரத்தினாம்மாள் அரச்சலூர் போலீசில் புகார் செய்து வந்தார்.

நேற்று கூட அவர் அரச்சலூர் போலீசில் தஞ்சம் அடைந்தார். என் மகனால் என் உயிருக்கு ஆபத்து என்று புகார் கூறினார்.

பிறகு வீட்டுக்கு வந்தார். நேற்று இரவு வழக்கம் போல் ரத்தினாம்மாளும் அவரது கணவர் சாப்பிட்டு விட்டு வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர்.

நள்ளிரவு 11 மணியளவில் மகன் பாலசுப்பிரமணி அங்கு ஆவேசமாக வந்தார். என் பெயருக்கு சொத்தை எழுதி வைக்க முடியுமா? முடியாதா? என்று கேட்டார். இது தொடர்பாக அவர்கள் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த பாலசுப்பிரமணி தாயை அடித்து உதைத்தார். அப்போது அவரை தள்ளிவிட்டதில் ரத்தினம்மாள் சுவற்றில் மோதினார். இதில் தலையில் பலத்த அடிபட்டது.

இதில் ரத்தினம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார். இந்த கொலை சம்பவம் பற்றிய தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு அரச்சலூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இது குறித்து இன்ஸ்பெக்டர் ஞானபிரகாஷ் வழக்குபதிவு செய்து பாலசுப்பிரமணியை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com