முந்திரி பருப்பு வாங்கி தருவதாக ரூ.1 கோடி மோசடி: தனியார் நிறுவன அதிகாரி கைது

இந்தோனேசியா மற்றும் தான்சானியா நாட்டிலிருந்து முந்திரி பருப்பு இறக்குமதி செய்து தருவதாக கூறி ரூ.1கோடி மோசடி செய்த தனியார் நிறுவன அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
Published on

சேலம்:

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தீவட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் வரதராஜன் (வயது 38). முந்திரி வியாபாரம் செய்து வருகிறார்.

இவர் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள தோப்புத்துறையைச் சேர்ந்த ஒரு தனியார் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விஜயகுமாரிடம் (41) பேஸ்புக் நண்பர் மூலம் அறிமுகமானார்.

அப்போது இந்தோனேசியா மற்றும் தான்சானியா நாட்டில் இருந்து முந்திரி பருப்பு இறக்குமதி செய்து தருவதாக விஜயகுமார் கூறினார்.

இதை நம்பிய வரதராஜன் அவரது வங்கி கணக்கில் 2 தவணைகளாக ரூ.1 கோடியை செலுத்தினார். ஆனால் 15 மாதங்களாகியும் விஜயகுமார் கூறியவாறு முந்திரி பருப்பை வாங்கி கொடுக்கவில்லை. பலமுறை கேட்டும் விஜயகுமார் சரியான பதில் கூறாமல் இழுத்தடித்து வந்தார்.

இதுகுறித்து வரதராஜன் கொடுத்த புகாரின் பேரில் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் டி.எஸ்.பி. சுரேஷ் குமார் விசாரணை நடத்தினார்.

பின்னர் விஜயகுமார், அவரது தாய் அபூர்வா, மனைவி சங்கீதா, சகோதரி சுஜதா, அவரது கணவர் ரமேஷ் மற்றும் சீனிவாசன், குமார் ஆகிய 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் விஜயகுமாரை மட்டும் போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மற்றவர்களை தீவிரமாக தேடிவருகிறார்கள்.

மேலும் இதேபோல வேறு யாரிடமாவது விஜயகுமார் மோசடி செய்தாரா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com