வெப் தொடர்கள் தயாரித்து வழங்க ஹாரி, மேகன் தம்பதியர் நெட் பிளிக்ஸ் உடன் ஒப்பந்தம்

நெட்பிளிக்ஸ் தளத்தில் வெப் தொடர்களை தயாரித்து வழங்குவதற்கு பல்லாண்டு கால ஒப்பந்தம் ஒன்றில் ஹாரி, மேகன் தம்பதியர் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஹாரி, மேகன் தம்பதியர்
ஹாரி, மேகன் தம்பதியர்
Published on

வாஷிங்டன்:

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியரின் இளைய மகன் ஹாரி, அவரது மனைவி மேகன். ஹாரி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அரச கடமைகளில் இருந்து விலகினார். அதைத் தொடர்ந்து அவர் மனைவி மேகன், குழந்தை ஆர்ச்சியுடன் அமெரிக்காவில் தெற்கு கலிபோர்னியாவில் குடியேறினார்.

இந்த நிலையில், நெட்பிளிக்ஸ் தளத்தில் வெப் தொடர்களை தயாரித்து வழங்குவதற்கு பல்லாண்டு கால ஒப்பந்தம் ஒன்றில் ஹாரி, மேகன் தம்பதியர் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர்கள் குழந்தைகள் நிகழ்ச்சிகள் தொடங்கி பல வகையான ‘வெப்’தொடர்களை தயாரித்து வழங்குவார்கள் என தெரிய வந்துள்ளது. இதையொட்டி அந்த தம்பதியர் வெளியிட்ட அறிக்கையில், “எங்கள் கவனமெல்லாம் வழங்க உள்ள தொடர்களின் உள்ளடக்கத்தை உருவாக்குவதில் இருக்கும். இது நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது. புதிய பெற்றோராக உற்சாகமான குடும்ப நிகழ்ச்சிகளை உருவாக்கித்தருவது எங்களுக்கு முக்கியமாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் நெட்பிளிக்சுடன் ஹாரி, மேகன் தம்பதியர் செய்துள்ள ஒப்பந்தத்தின் மதிப்பு விவரம் வெளியிடப்படவில்லை. அதே நேரத்தில் அவர்கள் வாழ்க்கையில் சம்பளம் பெறும் வேலையில் ஈடுபடுவதற்கான மிகப்பெரிய படியாக இது அமையும் என கூறப்படுகிறது.

அதே நேரத்தில் முன்னாள் நடிகையாக இருந்தாலும் மேகன், வெப் தொடர்களில் நடிக்க மாட்டார் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com