

இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யும் விவகாரத்தில் மத்திய அரசின் திடீர் கெடுபிடிகளை தொடர்ந்து மாட்டிறைச்சிக்கு கடும் கிராக்கி ஏற்படும் அச்சம் நிலவுகிறது. இதன் விளைவாக, கோழி இறைச்சியின் விலை 30 சதவீதம் வரை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2013-14 ஆண்டுவாக்கில் மாட்டிறைச்சியின் விலை பத்து சதவீதம் வரை கூடியிருந்ததாகவும், அதற்கு எதிராக பண்ணைக் கோழியின் விலை ஒன்பது சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்ததாகவும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
இதுதொடர்பாக, இந்திய வர்த்தகச் சந்தை நிலவரத்தை கண்காணித்துவரும் ‘அசோச்சம் பொருளாதார முகமை’ இன்று ஆய்வறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக கோழிப் பண்ணை தொழிலில் 10 முதல் 12 சதவீதம்வரை வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கேற்ப கோழி இறைச்சியின் பயன்பாடும் 18 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
அதேவேளையில், மாட்டிறைச்சி மீது பல்வேறு வகைகளில் விதிக்கப்பட்டுவரும் தடைகளின் எதிரொலியாக இந்த ஆண்டின் மார்ச் முதல் மே மாதத்துக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் மாட்டிறைச்சியின் விலை மூன்று சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்துள்ளது.
இதற்கு நேர்மாறாக பண்ணை கோழியின் விலை 22 சதவீதம் வரை உயர்ந்துள்ளது என்று தெரியவந்துள்ளது.
குறிப்பாக, மாட்டிறைச்சி மீதான தடை ஆந்திரா, அரியானா, கர்நாடகம், கேரளா, மராட்டியம், பஞ்சாப், தமிழ்நாடு, தெலுங்கானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கோழிப் பண்ணை தொழிலுக்கு நல்ல விடிவுகாலமாக அமைந்துள்ளதாக
இன்று வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.