

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் வருகிற ஜூலை 25-ந் தேதியுடன் முடிவடைவதால் ஜூலை 17-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.
ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்வதில் ஒருமித்த கருத்தை எட்டுவதற்காக எதிர்கட்சிகளுடன் பா.ஜனதா ஆலோசனை நடத்தி வருகிறது. இதற்காக பா.ஜனதாவில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த குழுவில் மத்திய மந்திரிகள் அருண்ஜெட்லி, ராஜ்நாத்சிங், வெங்கையா நாயுடு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
பா.ஜனதா குழுவினர் நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சீதாராம் யெச்சூரி, முலாயம்சிங் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். வேட்பாளர் யார் என்பதை பா.ஜனதா முடிவு செய்யாததால் எதிர்க்கட்சிகள் ஆதரவை பெறுவதில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இதற்கிடையே அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரும் பாராளுமன்ற துணை சபாநாயகருமான தம்பித்துரை நேற்று டெல்லியில் மத்திய மந்திரி வெங்கையா நாயுடுவை சந்தித்துப் பேசினார்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக இருவரும் 20 நிமிடம் ஆலோசனை நடத்தினார்கள்.
பின்னர் தம்பித்துரையை நிருபர்கள் சந்தித்து, வெங்கையா நாயுடுவுடன் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தொடர்பாக பேசினீர்களா? அ.தி.மு.க. ஆதரவு அளிக்குமா? என்று கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த தம்பித்துரை, ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு யாருக்கு என்பதை நான் கூற முடியாது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மூத்த நிர்வாகிகள் அதை பார்த்துக் கொள்வார்கள் என்றார்.
ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா வேட்பாளரை அ.தி.முக. ஆதரிக்க முடிவு செய்துள்ளது. ஏற்கனவே பா.ஜனதா தலைவர்கள் அ.தி.மு.க. ஆதரவு தங்களுக்கு கிடைக்கும் என்று கருத்து தெரிவித்தனர். இதே போல் தமிழக அமைச்சர்களும் பா.ஜனதாவை ஆதரிப்பதாக மறைமுகமாக கூறி வந்தனர்.
எனவே அ.தி.மு.க. ஆதரவை உறுதி செய்வதற்காகவே தம்பித்துரை வெங்கையா நாயுடுவை சந்தித்ததாக தெரிகிறது. என்றாலும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முறைப்படி விரைவில் அறிவிக்கிறார்.
கடந்த மே மாதம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த போதே ஜனாதிபதி தேர்தலில் அ.தி.மு.க. ஆதரவு அளிக்கும் என்பதை தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.
அ.தி.மு.க. ஏற்கனவே அம்மா அணி என்றும், புரட்சித்தலைவி அம்மா அணி (ஓ.பி.எஸ். அணி) என்றும் பிரிந்து கிடக்கிறது. பா.ஜனதாவை ஆதரிப்பதில் இரு அணியினரும் உறுதியாக இருந்தாலும் அ.தி.மு.க. அம்மா அணியிலும் துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரனால் பிளவு ஏற்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் தேர்தலில் பணபட்டுவாடா புகார் மற்றும் இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி போன்றவற்றால் தினகரனை கட்சிப் பணியில் இருந்து ஒதுக்கி வைத்துள்ளனர்.
ஆனால் ஜெயிலில் இருந்து விடுதலையான தினகரன் மீண்டும் கட்சிப் பணியில் ஈடுவேன் என்று கூறி ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார்.
தினகரனை 35 எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்கள் தினகரனை கட்சிப் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலில் நெருக்கடி ஏற்படுத்துவதற்காகவே தினகரன் ஆதரவாளர்கள் தனியாக ஆலோசனை நடத்தி மிரட்டல் விடுத்து வருவதாக கூறப்படுகிறது.
தினகரனின் நடவடிக்கைகளை ஜெயிலில் இருக்கும் சசிகலா கட்டுப்படுத்தி வைத்துள்ளார். சமீபத்தில் ஜெயிலில் சசிகலாவை தினகரன் சந்தித்த போது 60 நாட்கள் வரை பொறுத்து இருக்குமாறு கூறினார்.
இதை ஏற்று தினகரன் கருத்து எதுவும் கூறாமல் அமைதி காத்து வருகிறார். ஆனாலும் அவரது ஆதரவாளர்களான நாஞ்சில் சம்பத், வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன் ஆகியோர் மட்டும் தொடர்ந்து குழப்பம் ஏற்படுத்தும் வகையில் பேசுவதுடன் பா.ஜனதாவையும் விமர்சித்து வருகிறார்கள்.