கர்ப்பிணி பெண் பலி: போலீஸ் இன்ஸ்பெக்டரை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்

தஞ்சையை சேர்ந்த கர்ப்பிணி பெண் பலி: போலீஸ் இன்ஸ்பெக்டரை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்
கர்ப்பிணி பெண் பலி: போலீஸ் இன்ஸ்பெக்டரை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்
Published on

அய்யம்பேட்டை:

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள சூலமங்கலத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 40). இவருடைய மனைவி உஷா(36). இவர் கர்ப்பமாக இருந்தார். நேற்று இரவு மனைவி உஷாவுடன் ராஜா திருச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். துவாக்குடி சுங்கச்சாவடி அருகே சென்றபோது, ஹெல்மெட் அணியாமல் சென்றதால் அவரை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதில் அவர் நிற்காமல் சென்றதால் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் ஜீப்பில் பின்னால் சென்று மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேரும் கீழே விழுந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேன் உஷா மீது மோதியது. இதில் அவர் இறந்தார்.

இந்தநிலையில், உஷா இறந்த தகவல் அறிந்ததும், அய்யம்பேட்டை அண்ணாசிலையில் சூலமங்கலம் பகுதியை சேர்ந்த பொதுமக்களும், இறந்துபோன உஷாவின் உறவினர்களும் நேற்று இரவு 10 மணியளவில் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். கர்ப்பிணி பெண் உஷாவின் சாவுக்கு காரணமான போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜை கண்டித்து சுமார் கோ‌ஷ மிட்டனர். இதைத்தொடர்ந்து பாபநாசம் போலீஸ் டி.எஸ்.பி. செல்வராஜ் பாபநாசம் தாசில்தார் மாணிக்கராஜ் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது சம்பவத்துக்கு காரணமான போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு நள்ளிரவு 12 மணியளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் தஞ்சை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் 2 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com