பொங்கல் பண்டிகை: இலவச வேட்டி-சேலை வழங்கும் திட்டத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

பொங்கல் பண்டிகையையொட்டி 1.56 லட்சம் குடும்பத்துக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தினை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
பொங்கல் பண்டிகை: இலவச வேட்டி-சேலை வழங்கும் திட்டத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
Published on

சென்னை:

கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், அவர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பு வழங்கவும் மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். இலவச வேட்டி-சேலை வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்தார்.

நெசவாளர்களிடம் இருந்து வேட்டி-சேலைகளை கொள்முதல் செய்து அதை ஏழை-எளியவர்களுக்கு வழங்கும் வகையில் அந்த திட்டம் வரையறுக்கப்பட்டது. 1983-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். இந்த திட்டத்தை அமலுக்கு கொண்டு வந்தார்.

தமிழர்கள் பொங்கல் பண்டிகையை புத்தாடை அணிந்து கொண்டாட வேண்டும் என்பதற்காக இலவச வேட்டி-சேலை வழங்கும் திட்டத்தை பொங்கல் சமயத்தில் எம்.ஜி.ஆர். வழங்கினார். அன்று முதல் ஒவ்வொரு பொங்கலையும் முன்னிட்டு இலவச வேட்டி-சேலை வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு 1.68 லட்சம் குடும்பங்களுக்கு இலவச வேட்டி-சேலை வழங்கப்பட்டு இருந்தது. சுமார் 3.35 கோடி பேர் இதனால் பயன் அடைந்திருந்தனர்.

இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு இலவச வேட்டி-சேலைகளை வழங்குவதற்கான பணிகள் இரண்டு மாதங்களுக்கு முன்பே தொடங்கி விட்டன. நெசவாளர்களிடமிருந்து வேட்டி-சேலைகள் கொள்முதல் செய்யப்பட்டன. அவற்றை தமிழக முழுவதும் பல்வேறு மையங்களில் ஆய்வு செய்தனர்.

தற்போது அந்த வேட்டி-சேலைகள் அனைத்தும் தாலுகா வாரியாக அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு 1 கோடியே 56 லட்சத்து 5 ஆயிரத்து 630 சேலைகள் மற்றும் 1 கோடியே 56 லட்சத்து 17 ஆயிரத்து 168 வேட்டிகள் வழங்கப்படுகிறது. இதற்காக ரூ.484 கோடி செலவிடப்பட்டுள்ளது.

இலவச வேட்டி-சேலை வழங்கும் திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (வியாழக்கிழமை) தொடங்கி வைத்தார். அவரிடமிருந்து 7 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இலவச வேட்டி-சேலைகளை பெற்றுக் கொண்டனர்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கைத்தறி நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பு வழங்குவதற்காகவும், அதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடவும், 1983ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

இதன்படி, ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளையொட்டி விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவதோடு மட்டுமல்லாமல், கைத்தறி, விசைத்தறி தொழில்களில் ஈடுபட்டுள்ளோருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது.

அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, 2018ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின் கீழ், 484 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் 1 கோடியே 56 லட்சத்து 5 ஆயிரத்து 630 சேலைகளும், 1 கோடியே 56 லட்சத்து 17 ஆயிரத்து 168 வேட்டிகளும் பயனாளிகளுக்கு வழங்கிடும் அடையாளமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 7 குடும்பங்களுக்கு விலையில்லா வேட்டி-சேலைகளை வழங்கி திட்டத்தினை துவக்கி வைத்தார்.

நாளை முதல் தமிழகம் முழுவதும் நியாய விலை கடைகளில் இலவச வேட்டி-சேலைகளை பொது மக்கள் பெற்றுக் கொள்ளலாம். நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக ஒவ்வொரு பகுதியினரும் எந்தெந்த நாட்களில் இலவச வேட்டி-சேலைகளை பெற வேண்டும் என்று ஏற்கனவே தேதி நிர்ணயம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இலவச வேட்டி-சேலை பெற பொதுமக்கள் அவசரம் காட்ட வேண்டியது இல்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com