புதுவை அருகே மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்

கடல் அரிப்புக்கு நிரந்தர தீர்வாக தூண்டில் வளைவு திட்டத்தை செயல்படுத்த கோரி பொம்மையார் பாளையம் மீனவர்கள் கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுவை அருகே மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்
Published on: 

புதுச்சேரி:

புதுவையை அடுத்த தமிழக பகுதியான பொம்மையார்பாளையம் மீனவ கிராமத்தில் கடல் சீற்றம் மற்றும் கடல் அரிப்பு காரணமாக கடற்கரையோரம் இருந்த வீடுகள் சேதம் அடைந்து வருகின்றன.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு சார்பில் பொம்மையார்பாளையத்தில் மேடான பகுதியில் மீனவர்களுக்காக சுனாமி குடியிருப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன. அதில் மீனவர்கள் குடியேறிவசித்து வருகிறார்கள்.

அதே வேளையில் கடற்கரையோரம் இருந்த பழைய வீடுகளிலும் சில மீனவர்கள் குடும்பத்துடன் வசித்து வந்தனர். இதற்கிடையே கடல் சீற்றம் மற்றும் கடல் அரிப்பு காரணமாக அந்த வீடுகள் இடிந்து விழுந்தன.

மேலும் கடற்கரையோரம் இருந்த சொகுசு ஓட்டல்களும் கடல் அரிப்பால் சேதம் அடைந்து வந்தன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கடல் சீற்றம் மற்றும் கடல் அரிப்பால் பொம்மையார்பாளையம் சேர்ந்த தேவி, அன்னலட்சுமி, குணாளன் ஆகியோரது வீடுகள் இடிந்து விழுந்தன.

மேலும் கடல் அரிப்பால் பொம்மையார்பாளையம், பெரிய முதலியார்சாவடி, நடுக்குப்பம், தந்திராயன்குப்பம், சின்ன முதலியார் சாவடி உள்ள மீனவ கிராம மக்கள் அடிக்கடி பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பாதிப்புகளை தடுக்கும் வகையிலும், கடல் அரிப்புக்கு நிரந்தர தீர்வாக தூண்டில் வளைவு திட்டத்தை செயல்படுத்த கோரி நேற்று மாலை பொம்மையார் பாளையம் மீனவர்கள் கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் வானூர் தாசில்தார் பிரபாகரன், மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். போராட்டம் நடத்திய மீனவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகத்திடம் பேசி தூண்டில் வளைவு திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர்.

இதனை ஏற்று மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். மீனவர்களின் இந்த திடீர் போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com