

மார்த்தாண்டம்:
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மார்த்தாண்டம் அருகே உள்ள குன்னத்தூரில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் தான் அரசியலில் ஈடுபடுவது குறித்து கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதை வைத்து பார்க்கும்போது தி.மு.க. என்பது திராவிட முன்னேற்ற கழகம் அல்ல. குடும்ப முன்னேற்ற கழகம் என்பது போல உள்ளது. திராவிடம் பேசுபவர்கள் பாரம்பரியமாக குடும்ப அரசியல் நடத்துகிறார்கள்.
தமிழகத்தை தமிழர்கள் தான் ஆள வேண்டும் என்று கமலஹாசன் அரசியல் பயணத்தை தொடங்குகிறார். தமிழகத்தை தமிழன் தான் ஆள வேண்டும் என்பதில் எனக்கு எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் யார் தமிழன்? என்பதை தான் நாம் பார்க்க வேண்டும்.
இலங்கை பாராளுமன்றத்தில் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பது தொடர்பாக கண்டன தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். நமது பிரதமர் நரேந்திர மோடி இலங்கை சென்றிருந்தபோது இலங்கை பாராளுமன்றத்தில் பேசினார். அப்போது மீனவர் பிரச்சினையை மனிதாபிமானத்தோடு அணுக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தமிழக மீனவர் பிரச்சினை பற்றி நமது பாராளுமன்றத்திலும் பேசப்பட்டு வருகிறது. எனவே இதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
எல்லை தாண்டி வரும் இலங்கை மீனவர்களுக்கு நாமும் அபராதம் விதித்தால் எப்படி இருக்கும் என்பதை அவர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
காஞ்சி சங்கரமடத்தினர் தமிழுக்கு எள்ளளவும் இழுக்கு ஏற்படுத்த விரும்ப மாட்டார்கள். தற்போது தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை பற்றி சங்கரமடம் விளக்கம் அளித்துள்ளது. தமிழுக்காக குரல் கொடுப்பவர் விஜயேந்திரர். தற்போது அவருக்கு எதிராக போராட்டத்தை தூண்டி விட்டுள்ளனர். அவ்வாறு தூண்டி விட்டது யார்? என்பது அனைவருக்கும் தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.