கன்னியாகுமரி வழியாக திருவனந்தபுரம்-ராமேசுவரம் இடையே படகு போக்குவரத்து- பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்

திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வழியாக ராமேசுவரத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கப்படும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கன்னியாகுமரி வழியாக திருவனந்தபுரம்-ராமேசுவரம் இடையே படகு போக்குவரத்து- பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்
Published on

ராமேசுவரம்:

மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ராமேசுவரம் வந்தார். அவரை மாவட்ட தலைவர் முரளிதரன், மாவட்ட செயலாளர் ஆத்மா கார்த்திக், நகர் தலைவர் ஸ்ரீதர் உள்பட கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த அவர் நேற்று அதிகாலை 5 மணிக்கு ராமேசுவரம் கோவிலுக்கு வந்து ஸ்படிகலிங்க தரிசனம் செய்தார். பின்னர் கோவில் வளாகத்தில் யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு அங்கிருந்து எடுத்துச்செல்லப்பட்ட புனித நீர் மூலம் சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பின்னர் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:- கர்நாடகாவில் பா.ஜ.க. பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை.

தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுஉள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை எதிர்க்கட்சிகள் மற்றும் அனைத்து கட்சியினர் செய்து வந்தாலும் தமிழகத்திற்கு காவிரி நீர் வழங்குவதற்கு நாங்களும் முயற்சி மேற்கொண்டுள்ளோம்.

தமிழகத்தில் மழை, புயல் என எது நடந்தாலும் பா.ஜ.க.வினால் தான் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது. டி.டி.வி.தினகரனின் பேச்சில் நல்ல ஜோதிடராக மாறி வருகிறார் என்பது தெரிகிறது.

பாராளுமன்ற தேர்தல் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட மாட்டாது என்று கூறுவது உண்மையல்ல. அவரவர் மனதில் நினைப்பதையெல்லாம் பேசுகிறார்கள்.

தனுஷ்கோடி-தலைமன்னார் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கு இந்தியா தயாராக உள்ளது.

ஆனால் இலங்கை அரசு அமைதியாக இருக்கிறது. அந்நாட்டு அரசின் ஒப்புதலும், அனுமதியும் கிடைத்தால் கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும் திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வழியாக ராமேசுவரத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கப்படும். தமிழகத்தில் நல்ல ஒரு அரசாங்கத்தை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com