மத்திய அரசு சட்டத்தை அரசியலாக்க வேண்டாம்: பொன்.ராதாகிருஷ்ணன்

இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்துள்ள மத்திய அரசு சட்டத்தை அரசியலாக்க வேண்டாம் என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மத்திய அரசு சட்டத்தை அரசியலாக்க வேண்டாம்: பொன்.ராதாகிருஷ்ணன்
Published on

நாகர்கோவில்:

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

நமது நாட்டின் பாரம்பரிய வழக்கப்படி பசுக்கள், எருதுகள், காளைகள் விவசாயிகளின் நண்பனாகவும், உற்ற தோழனாகவும் திகழ்கிறது. இவற்றை தெய்வங்களாகவும் வழிபட்டு வருகிறோம்.

இடைக்காலத்தில் பசுக்களை பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டதால் அவற்றை பலரும் அடிமாட்டுக்கு விற்றார்கள். அந்த நிலையை மாற்றவும், விவசாயிகளின் வருமானத்தை பெருக்கவும் பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் தான் இந்த திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை யாரும் அரசியலாக்க வேண்டாம்.

சில உணவுகளை ஒரு மதத்தின் உணவு என்று சொல்ல முடியாது. அப்படி சொல்லி ஒரு மதத்தை ஒரு போதும் கொச்சைப்படுத்த கூடாது. இந்த மாமிசம் சாப்பிட்டால்தான் இந்த மதத்தை சேர்ந்தவர்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. உணவு என்பது ஒரு பிரச்சனையே இல்லை.

சம்பந்தமே இல்லாமல் ஒரு மதத்துடன் இதனை ஒப்பிட்டு ஓட்டு வங்கிக்காக அரசியல் செய்கிறார்கள்.

முன்பு வீடுகள் தோறும் பசுக்கள் இருந்தன. அந்த நிலை மாறியதால்தான் பால் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதை மையமாக வைத்துதான் இன்று பாலில் ரசாயனம் கலப்பதாக தமிழக அமைச்சர் புகார் கூறியுள்ளார். பாலில் ரசாயன கலப்படம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மிருகங்களாக இருந்தாலும் அதை நேசிக்க வேண்டும். குதிரையை தெய்வமாக மதிக்கும் நாடுகள் இருக்கிறது. அதை கொல்லக்கூடாது என்று சில நாடுகளில் சட்டம் உள்ளது. சில நாடுகளில் குதிரை மாமிசமும் சாப்பிடுகிறார்கள்.

ஜனாதிபதி வேட்பாளராக பொதுவானவரை தேர்ந்தெடுக்காவிட்டால் போட்டி வேட்பாளரை நிறுத்துவதாக காங்கிரஸ் தலைமையில் நடந்த கூட்டத்தில் கூறியிருக்கிறார்கள்.

ஏற்கனவே தமிழகத்தின் அப்துல் கலாமை புறக்கணித்து விட்டு வேறொருவரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தார்கள். அவரை வெற்றி பெறவும் வைத்தார்கள். அவர்கள் தேர்ந்தெடுத்த ஜனாதிபதி எப்படிப்பட்டவர் என்பது அனைவருக்கும் தெரியும்.

நாட்டில் தனிமை பட்டு நிற்பவர்கள் சேர்ந்து நடத்திய காட்சியாகத்தான் டெல்லியில் சோனியா தலைமையில் நடந்த கூட்டம் இருந்தது.

தமிழகத்தில் உள்ள நதிகளை இணைக்க வேண்டும். மேற்கு நோக்கி பாயும் நதிகளை பாதுகாப்பதும் நமது கடமை .

இவ்வாறு அவர் கூறினார்.

மாடுகள் விற்க தடை விதிக்கப்பட்டது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மத்தியில் ஆர்.எஸ்.எஸ். ஆட்சி தான் நடக்கிறது என்று குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்கு பதில் அளித்து பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில் ஆவினங்களை காப்பது ஆர்.எஸ்.எஸ். ஆல் தான் முடியும் என்று திருமாவளவன் சொன்னால் எந்த அளவிற்கு மனிதத்தன்மை அற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதை அவரின் கேள்வி மூலம் தெரிந்து கொள்ளலாம். அவர் இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com