1 லட்சம் பைக்குகள் புடைசூழ அமித்ஷா செல்லும் பேரணி: பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ்

அரியானா மாநிலத்தில் 1 லட்சம் மோட்டார் பைக்குகளுடன் அமித்ஷா செல்ல இருக்கும் பேரணிக்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கில், மத்திய - மாநில அரசுகளுக்கு பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ் அளித்துள்ளது. #AmitShah
1 லட்சம் பைக்குகள் புடைசூழ அமித்ஷா செல்லும் பேரணி: பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ்
Published on

புதுடெல்லி:

அடுத்த ஆண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலை குறிவைத்து அரியானா மாநிலம் ஜிந்த் நகரில் பா.ஜ.க தலைவர் அமித்ஷா பிரம்மாண்ட பேரணி நடத்த உள்ளார். வரும் 15-ம் தேதி நடக்க உள்ள இந்த பேரணியில் 1 லட்சம் மோட்டார் பைக்குகளில் தொண்டர்கள் கலந்து கொள்ள இருப்பதாக அம்மாநில பா.ஜ.க தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் விக்டர் திஸ்ஸா தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இந்த பேரணிக்கு தடை கோரி மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஏற்கனவே, தலைநகர் டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியில் காற்று மிக மோசமாக மாசுபட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜாட் இனத்தவர்கள் இடஒதுக்கீடு கேட்டு இதே போல மோட்டார் பைக் பேரணி நடத்திய போது உச்ச கட்ட அளவில் காற்று மாசுபட்டதாக எச்சரிக்கப்பட்டது.

தற்போது, 1 லட்சம் பைக்குகள் ஒரே இடத்தில் கலந்து கொள்ளும் போது காற்று மிகவும் மாசுபடும். எனவே, இந்த பேரணிக்கு தடை விதிக்க வேண்டும். அல்லது, சுற்றுப்புற சூழலுக்கு உகந்த வாகனங்களை பயன்படுத்தி பேரணி செல்ல உத்தரவிட வேண்டும் என மனுவில் கேட்டுக்கொண்டார்.

இந்த மனுவை இன்று விசாரித்த பசுமை தீர்ப்பாயம், வரும் 13-ம் தேதிக்குள் இது தொடர்பாக பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கும், அரியானா மாநில அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #AmitShah #TamilNews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com