

சென்னை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்றும், அவரது ஆட்சி ஊழல் ஆட்சியாக மாறி விட்டது என்றும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து மனு அளித்தனர். இதனால் எடப்பாடி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் அதிரடியாக உத்தர விட்டார்.
இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஐகோர்ட்டு நீதிபதி துரைசாமி, 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கத்துக்கு உடனடியாக தடை விதிக்க மறுத்து விட்டார். அதே நேரத்தில் 18 தொகுதிகளும் காலியாக உள்ளதாக கூறி இடைத் தேர்தல் நடத்துவதற்கான எந்த ஏற்பாடுகளையும் செய்யக்கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
தகுதி நீக்கத்துக்கு தடை விதிக்க முடியாது என்பது தினகரன் அணியினருக்கு பாதகமாகவும், தேர்தல் நடத்தக்கூடாது என்கிற அறிவிப்பு சாதகமாகவும் பார்க்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை அக்டோபர் 4-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்காக புதிய நீதிபதி ரவிச்சந்திர பாபு நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நாளை (4-ந்தேதி) விசாரிக்க உள்ளார். நாளைய விசாரணையின்போது என்ன நடக்கும்? என்கிற எதிர்பார்ப்பு பரவலாக நிலவி வருகிறது.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரின் தகுதி நீக்கத்துக்கு தடை விதிக்கப்படுமா? அல்லது சபாநாயகரின் முடிவில் தலையிட முடியாது என்று கூறி ஐகோர்ட்டு கை விரித்து விடுமா? என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த வழக்கு விசாரணையின் போது எந்த மாதிரியான தீர்ப்புகள் கூறப்பட்டாலும் நிச்சயம் அரசியல் அரங்கில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இதனால் தமிழக அரசியல் களத்தில் அடுத்து நடக்கப் போவது என்ன? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் தலையிட முடியாது என்று ஐகோர்ட்டு கூறி விட்டால் தினகரன் அணியினர் நிச்சயம் அதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுப்பார்கள். சுப்ரீம் கோர்ட்டிலும் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்காவிட்டால் நிச்சயம் 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது.
18 தொகுதிகளில் இடைத் தேர்தல் நடக்கும்போது, ஆர்.கே.நகர் தொகுதிக்கும் சேர்த்துதான் தேர்தல் நடத்தப்படும்.
இப்போதைய சூழலில் அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவும் மோதலும் நிச்சயம் அக்கட்சியின் வெற்றியை பாதிக்கும் என்றே கூறப்படுகிறது.
இடைத்தேர்தல் நடந்தால் அது நிச்சயம் தி.மு.க.வுக்கு சாதகமாகவே இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.
தமிழக சட்டசபையில் தி.மு.க. கூட்டணியின் பலம் 98 ஆக உள்ளது.
19 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டு அதில் தி.மு.க. வெற்றி பெற்றால் சட்டசபையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் பலம் 117 ஆக உயர்ந்து விடும். இதனால் அரசுக்கு நெருக்கடி ஏற்படும்.
தினகரன் ஆதரவு எம்.எல். ஏ.க்கள் 18 பேர் மற்றும் அ.தி.மு.க. கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நிலையை எடுத்துள்ளனர்.
இதனால் சட்டசபையில் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தால் அது தோல்வி அடைய வாய்ப்பு உள்ளது.இதனால் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்பட வழிவகுக்கும். அதனால் 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.