பிரதமர் மோடி வாழ்க்கை வரலாறு படத்துக்கு தேர்தல் கமிஷன் அனுமதி

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் வரும் 5-ம் தேதி வெளியாவதற்கு தடை விதிக்க தலைமை தேர்தல் கமிஷன் மறுத்து விட்டது. #Modibiopic #ECclearance
பிரதமர் மோடி வாழ்க்கை வரலாறு படத்துக்கு தேர்தல் கமிஷன் அனுமதி
Published on

பிரதமர் நரேந்திரமோடி வாழ்க்கையை மையமாக வைத்து ‘பி.எம்.நரேந்திரமோடி’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் மோடியின் கதாபாத்திரத்தில் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் 5-ம் தேதி வெளியாகிறது.
 
23 மொழிகளில் தயாராகியுள்ள இந்த திரைப்படம் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி பா.ஜனதாவுக்கு சாதகமாக அமையும் என்று கூறப்படுகிறது. எனவே படத்தை தேர்தல் நேரத்தில் வெளியிட அனுமதிக்கக்கூடாது என்று தேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் மனு அளித்து உள்ளது.

ஓய்வு பெற்ற 47 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் இந்த படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் கமிஷனுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். அதில் “தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் இந்த படத்தை வெளியிட அனுமதிப்பது தேர்தல் விதிமீறல் ஆகும்” என்று கூறியுள்ளனர்.

நேற்று இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது மும்பை ஐகோர்ட்டில் தேர்தல் கமிஷன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒரு படத்தை எப்போது வெளியிடுவது என்பது தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் மும்பையில் உள்ள சினிமா தணிக்கை குழுவினருக்குதான் உண்டு. இதில் நாங்கள் தலையிடுவதற்கு எதுவுமில்லை என்று தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் கமிஷன் இன்று ஒரு முடிவுக்கு வந்துள்ளது. எனவே, ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு வரும் 5-ம் தேதி ‘பி.எம்.நரேந்திரமோடி’ திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com