ஒடிசாவில் பானி புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார் பிரதமர் மோடி

ஒடிசா மாநிலத்தை அசுர வேகத்தில் தாக்கி துவம்சம் செய்த பானி புயலின் தாக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை இன்று பிரதமர் மோடி பார்வையிட்டார். #PMModi #CycloneFani
ஒடிசாவில் பானி புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார் பிரதமர் மோடி
Published on

புவனேஷ்வர்:

வங்கக் கடலில் உருவான பானி புயல் கடந்த வெள்ளிக்கிழமை காலை ஒடிசா மாநிலத்தில் புரி நகரின் அருகே கரையைக் கடந்தது.

அப்போது சுமார் 200 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்றும், பலத்த மழையும் பெய்தது. இதனால் ஒடிசாவில் 14 மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

நவீன கருவிகள் மூலம் பானி புயலின் பயணப் பாதையை மிக துல்லியமாக கணித்து இருந்ததால் அது செல்லும் பகுதிகளில் இருந்து சுமார் 12 லட்சம் மக்களை ஒடிசா மாநில அரசு வெளியேற்றி பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்று இருந்தது. இந்த முன்னெச்சரிக்கை காரணமாக பெருமளவு உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

கோரதாண்டவம் ஆடிய இந்த பானி புயலில் சிக்கி 8 பேர் உயிரிழந்ததாக முதலில் அறிவிக்கப்பட்டது. பிறகு பலி எண்ணிக்கை மெல்ல, மெல்ல உயர்ந்தது. இன்று காலை நிலவரப்படி 34 பேர் வரை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசாவில் புரி நகரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் புவனேஷ்வர் பாதியளவு பாதிக்கப்பட்டுள்ளது. இரு நகரங்களிலும் நிவாரண பணிகள் போர்கால அடிப்படையில் நடந்து வருகின்றன.

இந்நிலையில் ஒடிசாவில் புயலால் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய பிரதமர் மோடி முடிவு செய்தார். இன்று (திங்கட்கிழமை) காலை அவர் தனி விமானத்தில் டெல்லியில் இருந்து புறப்பட்டு ஒடிசா தலைநகர் புவனேஷ்வர் வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை ஒடிசா கவர்னர் கணேசிலால், முதல் மந்திரி நவீன் பட்நாயக் மற்றும் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் ஆகியோர் வரவேற்றனர்.

பிறகு பிரதமர் மோடி தலைநகர் புவனேஷ்வரில் பானி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்றார். புயலால் உருக்குலைந்த இடங்களை பார்த்து ஆய்வு செய்தார். ஹெலிகாப்டரில் சென்றும் பார்த்தார்.

பிரதமர் மோடியிடம் புயல் பாதிப்பு நிவாரண பணிகளை விரைவாக நடத்தி முடிக்க கூடுதல் நிதி உதவி செய்ய வேண்டும் என்று ஒடிசா மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக் கேட்டுக் கொண்டார். அதற்கு பிரதமர் மோடி உரிய ஏற்பாடுகள் செய்வதாக உறுதி அளித்தார். #PMModi #CycloneFani

X

Maalai Malar
www.maalaimalar.com