நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பிளாஸ்மா தெரபி சிகிச்சைக்கு தேவையான ரத்த மாதிரி சேகரிப்பு

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு நவீன முறையிலான பிளாஸ்மா தெரபி சிகிச்சைக்கு தேவையான ரத்த மாதிரி சேகரிக்கும் பணி தொடங்கி உள்ளது.
பிளாஸ்மா
பிளாஸ்மா
Published on

நெல்லை:

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் மூலம் சிகிச்சை அளித்து பெரும்பாலானோர் குணமடைந்து வருகிறார்கள். மேலும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தடுப்பூசிகள் தயாரிக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் உடலில் இருந்து நோய் எதிர்ப்பு சக்தியுடன் விளங்கும் பிளாஸ்மா செல்களை சேகரித்து அதனைக்கொண்டு, கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளித்தால் எளிதில் குணமடைந்து விடுவார் என்று கூறப்படுகிறது. அதாவது ஒரு நோய் தொற்றில் இருந்து மீண்டவர்களின் உடலில் அந்த நோயை எதிர்த்து போராடி அழிக்கும் எதிரணுக்கள் உருவாகி இருக்கும். அந்த அடிப்படையில் கொரோனா நோயில் இருந்து குணமடைந்தவர்கள் உடலில் இருந்து எடுக்கப்படும் எதிரணுக்கள், மற்ற நோயாளிகளின் உடலில் செலுத்தப்படும் போது கொரோனா வைரசை அழிக்கும்.

இதையொட்டி தமிழகத்தில் ஒருசில மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிகள் பிளாஸ்மா சிகிச்சை மையமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அவற்றில் நெல்லை ஐகிரவுண்டு அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியும் ஒன்றாகும்.

இதையொட்டி நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பிளாஸ்மா சிகிச்சைக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது. இதுதொடர்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த ஆரோக்கியமானவர்களை டாக்டர்கள் தொடர்பு கொண்டு பேசினார்கள். இதில் பலர் தங்களது ரத்தத்தை தானமாக வழங்க முன்வந்தனர்.

அதன்படி நேற்று முதலாவது கொடையாளரை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு வரவழைத்தனர். அவரிடம் இருந்து ரத்தம் சேகரிக்கப்பட்டது. இதில் இருந்து பிளாஸ்மா பிரித்து எடுக்கப்பட்டு, கொரோனா நோயாளிகளுக்கு செலுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், “கொரோனாவால் குணமடைந்தவர்களில் பிளாஸ்மா தானம் வழங்க முன்வந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா? என்று மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் குறிப்பிட்ட நாட்கள் கழித்து இவர்களை வரவழைத்து உரிய பரிசோதனை மூலம் நோய் எதிர்ப்பு சக்தியும் பரிசோதிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து முதல் கொடையாளரிடம் இருந்து ரத்தம் சேகரிக்கப்பட்டு உள்ளது. ஒருவர் 28 நாட்கள் கழித்து மீண்டும் ஒரு முறை பிளாஸ்மா தானம் செய்யலாம்“ என்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com