விருத்தாசலம் அருகே வாலிபரை வெட்டிக்கொன்று பிணம் எரிப்பு: பஸ் டிரைவர் சிக்கினார்

விருத்தாசலம் அருகே வாலிபரை வெட்டிக் கொன்று உடலை எரித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on

விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த வி.சாத்தமங்கலத்தை சேர்ந்தவர் செம்புலிங்கம் (வயது 35). இவரது மனைவி கசந்தாமணி(30). செம்புலிங்கத்தின் மீது திருட்டு வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் கடலூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் நேற்று மாலை செம்புலிங்கம் விருத்தாசலத்தை அடுத்த குப்பநத்தம் நல்லூரில் உள்ள தனது உறவினரான தனியார் பஸ்சில் டிரைவராக வேலைபார்க்கும் கண்ணன் வீட்டுக்கு சென்றார்.

அப்போது கண்ணனுக்கும், செம்புலிங்கத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

இதில் ஆத்திரமடைந்த கண்ணன் அரிவாளால் செம்புலிங்கத்தை வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து விருத்தாசலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரவிசந்திரன், ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் விநாயக முருகன் ஆகியோர் கொண்ட போலீசார் கண்ணன் வீட்டுக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அங்கு அவரை காணவில்லை. அந்த பகுதியில் முகாமிட்டு கண்ணனை தேடி வந்தனர்.

இந்தநிலையில் இன்று காலை கண்ணனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கண்ணன் செம்புலிங்கத்தை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

மேலும் விருத்தாசலம் அருகே உள்ள பெரிய வடவாரி நகராட்சி குப்பைகள் கொட்டும் கிடங்கில் குப்பையோடு குப்பையாக வைத்து கொலை செய்த செம்புலிங்கத்தின் உடலை எரித்ததாக போலீசாரிடம் கூறினார்.

இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குப்பை கிடங்கில் பாதி எரிந்த நிலையில் கிடந்த செம்புலிங்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கண்ணனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாலிபரை வெட்டிக் கொன்று உடலை எரித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com