கொரோனா ஆபத்தை இன்னும் உணரவில்லை... சமூக விலகலை புறந்தள்ளும் மக்கள்

கொரோனா வைரசின் ஆபத்தை உணராமல் சில பகுதிகளில் பொதுமக்கள் சமூக விலகலை கடைப்பிடிக்காமல் நெருக்கமாக நின்று பொருட்கள் வாங்குகின்றனர்.
மார்க்கெட் பகுதியில் சமூக விலகலை பின்பற்றாமல் நெருக்கமாக செல்லும் காட்சி
மார்க்கெட் பகுதியில் சமூக விலகலை பின்பற்றாமல் நெருக்கமாக செல்லும் காட்சி
Published on

சென்னை:

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், தற்போதைக்கு மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்ப்பதுதான் ஒரே தீர்வு. இதற்காகத்தான் சமூக விலகலை கடைப்பிடிக்கும்படி அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. வெளியே செல்லும்போது மாஸ்க் கண்டிப்பாக அணியவேண்டும் என்றும் கூறுகிறது.

ஆனால் ஒரு சில இடங்களில் மக்கள் இந்த உத்தரவை மதிப்பது இல்லை, கொரோனா வைரசின் ஆபத்தை உணரவும் இல்லை. ரேசன் கடைகள், மளிகைக் கடைகள், மார்க்கெட்டுகள், மாவு மில்கள் மற்றும் காய்கறி கடைகளில் மக்கள் சமூக விலகலை கடைப்பிடிக்காமல் ஒருவருக்கொருவர் உரசிக்கொண்டு நிற்பதை பார்க்க முடிகிறது.

இதனைப் பார்க்கும்போது மக்கள் இன்னும் கொரோனா வைரசின் தீவிரம் மற்றும் அதனால் ஏற்படும் ஆபத்தை உணரவில்லை என்பது தெரிகிறது. நம் ஊரில் தான் கொரோனா இல்லையே, அதனால் நமக்கு எங்கே வரப்போகிறது என்ற அஜாக்கிரதையும் அலட்சியமும்தான் இதற்கு காரணம்.

வெளியே வரும்போது மாஸ்க் அல்லது கைக்குட்டையை கட்டிக்கொண்டு வரவேண்டும் என்ற விழிப்புணர்வும் பலருக்கு வரவில்லை. முகத்தை மறைக்காமல் நேரடியாக வந்து பொருட்கள் வாங்குகின்றனர். கடைக்காரர்கள் எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும் காது கொடுத்து கேட்பதில்லை.

சிலர் முறையாக மாஸ்க் அணிவதில்லை.  அவ்வப்போது மாஸ்கை முகத்தைவிட்டு கீழே இறக்கிவிட்டு சாவகாசமாக காற்று வாங்குகின்றனர். காவல்துறையினர் வரும்போது மட்டும் பயந்துபோய் மாஸ்க்கை இழுத்து முகத்தை மறைக்கின்றனர். மாஸ்க்கை ஏதோ கடமைக்காக அணிகின்றனர். சிலர் குழந்தைகளுக்கு மாஸ்க் அணிவிக்காமல் வீதிகளில்  அழைத்து செல்வதையும் பார்க்க முடிகிறது.

சமூக விலகலை மீறுதல், மாஸ்க் அணியாமல் வெளியில் செல்வது என ஒரு சிலர் செய்யும் செயல்களால் சமூக தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் 3-ம் கட்டத்திற்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றால், ஊரடங்கு உத்தரவை 14-ம் தேதிக்கு பிறகும் நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். மருத்துவ வல்லுநர்களும் இதே கருத்தை முன்வைத்துள்ளனர். எனவே, ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படவே அதிக வாய்ப்பு உள்ளது.

அப்படியே நீட்டிக்கப்பட்டாலும், அதனை வெற்றிகரமாக செயல்படுத்துவது மக்கள் கையில்தான் இருக்கிறது. எனவே, முடிந்த அளவிற்கு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்கு வரும்போதும் மிகுந்த கவனத்துடன் மாஸ்க் அல்லது கைக்குட்டையை அணிந்து வருவது அவர்களுக்கும் நல்லது, மற்றவர்களுக்கும் நல்லது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com