

அரசு போக்குவரத்துக்கழகங்களுக்கு கடந்த 8 ஆண்டுகளில் (2011-12 முதல் 2018-2019 வரை) பங்கு மூலதன உதவி, கடன், வழிவகை முன்பணம், உதவித்தொகை, மாணவர் கட்டணச்சலுகையை ஈடுசெய்தல் ஆகிய வகைகளில் 15,040 கோடியே 9 லட்சம் ரூபாயை அரசு வழங்கியுள்ளது.குறிப்பாக, ஓய்வுபெற்ற போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய சேமநலநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு ஊதியம், ஓய்வூதிய ஒப்படைப்பு ஆகிய சட்டரீதியான பணப்பலன்கள் மற்றும் தாமதமாக வழங்கப்பட்ட ஓய்வூதிய நிலுவைத் தொகைக்கான வட்டி முதலியன வழங்கும் பொருட்டு, 2017-2018-ம் நிதியாண்டில் 2147 கோடியே 39 லட்சம் ரூபாயும், 2018-2019-ம் நிதியாண்டில் 487 கோடியே 56 லட்சம் ரூபாயும் அரசு வழங்கியுள்ளது.
மேற்படி, தமிழ்நாடு அரசின் நிதியுதவி மூலம் மார்ச் 2018 வரை ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு சட்ட ரீதியான பணப்பயன்கள் வழங்கப்பட்டுள்ளன.தற்போது, ஏப்ரல் 2018 முதல் மார்ச் 2019 வரை ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சட்டரீதியான பணப்பலன்களான சேமநல நிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு ஊதியம், ஓய்வூதிய ஒப்படைப்பு, பங்களிப்பு ஓய்வூதியம் ஆகியவற்றினை வழங்கும் பொருட்டு அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கும் 1,093 கோடி ரூபாயை வழங்கிட அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் மூலம், மாநகர் போக்குவரத்துக்கழகம், அரசு விரைவுப்போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் விழுப்புரம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சேலம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கோயம்புத்தூர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கும்பகோணம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் மதுரை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் திருநெல்வேலி சார்ந்த ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கான நிலுவையில் உள்ள பல்வேறு நிலுவைத்தொகைகளான வருங்கால வைப்புநிதி, ஓய்வூதிய ஒப்படைப்புத்தொகை, விடுப்பு ஒப்படைப்பு ஊதியம் பணிக்கொடை வித்தியாசம் மற்றும் நிலுவைத் தொகைகளுடன் சேர்த்து, ஆக மொத்தம் 6,283 ஓய்வு பெற்ற பணியாளர்கள் பயனடைவார்கள்.
அதன்படி, அரசு போக்குவரத்துக்கழகங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற 6,283 பணியாளர்களுக்கு 1,093 கோடி ரூபாய்க்கான ஓய்வூதிய பணப்பயன்களை வழங்கிடும் அடையாளமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 9 ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதிய பணங்களுக்கான காசோலைகளை வழங்கினார்.