கிறிஸ்தவ ஆலயம் மீது கல்வீச்சு- தாய் மதம் மாறியதால் வாலிபர் ஆத்திரம்

பென்னாகரம் அருகே தாய் மதம் மாறியதால் ஆத்திரமடைந்த மகன் கிறிஸ்தவ ஆலயத்தின் மீது கற்களை எடுத்து வீசியுள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
கிறிஸ்தவ ஆலயம் மீது கல்வீச்சு- தாய் மதம் மாறியதால் வாலிபர் ஆத்திரம்
Published on

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பவளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் செவத்தான். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களது மகன் முருகன் (வயது21). இவர்கள் 3 பேரும் சேர்ந்து கூலிவேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வந்தனர்.

ராஜேஸ்வரி கிறிஸ்தவம் மதத்திற்கு மாறினார். இவர் அதே பகுதியில் உள்ள பாதிரியார் ஆபிரகாம் தலைமையில் இயங்கும் கிறிஸ்தவ ஆலயத்திற்கு தினமும் சென்று பிரார்த்தனை செய்து வருகிறார்.

இந்த நிலையில் ராஜேஸ்வரி தனது மகன் முருகன் திருமணத்திற்காக பல இடங்களில் பெண் பார்த்து வந்தார். ஆனால் அவர் வேறு மதத்திற்கு மாறியதல் யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை. இதனால் முருகனின் திருமணம் தடைபட்டு வந்தது.

இதுகுறித்து முருகனின் உறவினர்கள் அவரிடம் உனது தாய் மதம் மாறியதால் தான் யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை என்று கூறியதாக தெரியவந்தது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ராஜேஸ்வரி ஜெபகூட்டத்திற்காக ஆலயத்திற்கு சென்றார். அங்கு வந்த முருகன், உன்னால் தான் எனக்கு உறவினர்கள் யாரும் பெண் கொடுக்கவில்லை என்று கூறி தாயிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த பாதிரியார் மற்றும் பொதுமக்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர்.

இதில் சமாதானம் அடையாத முருகன் பாதிரியார் ஆபிரகாமிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் ஆத்திரம் அடைந்த முருகன் கீழே கிடந்த கற்களை எடுத்து ஆலயத்தின் மீது வீசினார். இதில் ஆலயத்தில் இருந்த கண்ணாடிகள் சுக்கு நூறாக நொறுங்கியது. பின்னர் அங்கிருந்து முருகன் தப்பி ஓடிவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து பாதிரியார் ஆபிரகாம் பென்னாகரம் போலீஸ் நிலையத்தில் முருகன் மீது புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனை தீவிரமாக தேடி வருகின்றனர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com