ப.சிதம்பரம் முன்ஜாமீன் விவகாரம்- உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ, அமலாக்கத்துறை கேவியட் மனு தாக்கல்

கைது நடவடிக்கையை தவிர்ப்பதற்காக ப.சிதம்பரம் முன்ஜாமீன் தாக்கல் செய்துள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிபிஐ அலுவலகம்
சிபிஐ அலுவலகம்
Published on

புதுடெல்லி:

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி ஐகோர்ட் மறுத்துவிட்டது. இதையடுத்து இந்த வழக்கை விசாரித்து வரும்  சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ப.சிதம்பரத்திடம் நேரடியாக விசாரணை நடத்தி அவரை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது. ஆனால் அவர் எங்கு இருக்கிறார் என்பதை அறிய முடியவில்லை. 

எனவே, அவர் வெளிநாடுகளுக்கு செல்வதை தடுக்கும் வகையில் அவருக்கு எதிராக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே, முன்ஜாமீன் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ப.சிதம்பரம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவையும் அவசரமாக விசாரிக்க  தலைமை நீதிபதி அமர்வு மறுத்துவிட்டது. ப.சிதம்பரம் மனுவை இன்று பிற்பகல் நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வு விசாரிக்கலாம் என தெரிகிறது.

இந்நிலையில், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தங்களது தரப்பு கருத்தை கேட்காமல் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது. 

எனவே, ப.சிதம்பரத்தின் மனு விசாரணைக்கு வரும்போது, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தரப்பில் முன்வைக்கப்படும் வாதங்களைப் பொருத்து தீர்ப்பு அமையும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com