புதுடெல்லி:
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் எனப்படும் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக முன்னாள் தொலை தொடர்பு துறை மந்திரி ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி மற்றும் சில நிறுவன நிர்வாகிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சி.பி.ஐ, விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கு டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தீர்ப்பு தேதி எப்போது என்ற எதிர்ப்பார்ப்பு நிலவிய நிலையில், மூன்று முறை இதற்கான அறிவிப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், வரும் 21-ம் தேதி காலை 10.30 மணிக்கு தீர்ப்பு விபரங்கள் அறிவிக்கப்படும் என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி சைனி அறிவித்துள்ளார். இதனையடுத்து, கோர்ட்டில் இருந்து வெளியே வந்த கனிமொழியிடம் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு ‘பார்க்கலாம்’ என்று பதிலளித்தார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சுப்பிரமணிய சுவாமி, நாட்டிற்கு ஆதரவாகவே தீர்ப்பு வரும் என்று கூறியுள்ளார். தீர்ப்பு வெளியாகும் தேதி அன்று தான் ஆர்.கே நகர் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.