கட்ட பஞ்சாயத்து, நில அபகரிப்பு புகார் - தமிழிசைக்கு திருமாவளவன் சவால்

கட்ட பஞ்சாயத்து, நில அபகரிப்பு புகார் போன்ற என் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரத்தை காட்ட முடியுமா? என்று பா.ஜனதா தலைவர் தமிழிசைக்கு திருமாவளவன் சவால் விடுத்துள்ளார்.
கட்ட பஞ்சாயத்து, நில அபகரிப்பு புகார் - தமிழிசைக்கு திருமாவளவன் சவால்
Published on

‘மெர்சல்’ பட விவகாரத்தில் பா.ஜனதாவின் எதிர்ப்பு பற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறும்போது, “நடிகர்களை வளைத்துப் போட்டு பா.ஜனதா கால் ஊன்றப் பார்ப்பதாக” தெரிவித்தார்.

இதற்கு பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பதில் அளிக்கையில், “திருமாவளவன் அனுபவம் தான் இப்படி பேச வைக்கிறது. அவர்தான் ஒரு இடத்தை வளைத்துப்போட சம்பந்தப்பட்டவரை முதலில் மிரட்டுவார். கட்ட பஞ்சாயத்து செய்து நிலத்தை அபகரிப்பார். அவரது அலுவலகம் உள்ள இடத்தில் இருந்து எல்லா இடங்களையுமே வளைத்து தான் போட்டுள்ளார். எங்களுக்கு நடிகர் விஜய்யை வளைத்து போட வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.

தமிழிசையின் இந்த குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில் அளித்துள்ளார். என் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரத்தை காட்ட முடியுமா? என்று சவால் விடுத்துள்ளார். இது பற்றி திருமாவளவன் கூறியதாவது:-

பா.ஜனதா நடவடிக்கைகளை தொடர்ந்து நான் அம்பலப்படுத்தி வருவதால் அவர் என் மீது எரிச்சல் அடைந்திருக்கிறார் என்று தெரிய வருகிறது. தமிழகத்தில் வேறு எந்த தலைவர் மீதாவது இப்படி ஒரு அபாண்டமான பழியை சுமத்த முடியுமா?

தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றாலே அவர்களை எப்படியும் விமர்சிக்கலாம், பழி சுமத்தலாம், அவதூறு பரப்பலாம் என்று டாக்டர் ராமதாஸ், டாக்டர் தமிழிசை போன்றவர்கள் பேசி வருகிறார்கள்.

எந்த இடத்திலாவது நான் கட்ட பஞ்சாயத்தில் ஈடுபட்டேன் என்று இவர்களால் ஒரே ஒரு ஆதாரத்தை காட்ட முடியுமா? தலைமை அலுவலகம் இயங்கும் இடம் சுத்த கிரயமாக வாங்கிய இடமாகும். பதிவுத் துறையில் அதற்கான கிரைய பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் இந்த அவதூறை அவர் பரப்பி இருககிறார். இதை சட்டப்படி எதிர்கொள்வோம்.

அவர் என் மீதும், எங்கள் கட்சியின் மீதும் சொல்லுகிற விமர்சனம் என்பது அவரது மனசாட்சிக்கு எதிரானது.

இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:-

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த மாநில சுயாட்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியதற்காக நன்றி தெரிவிக்கவும் தலித் உள்ளிட்ட பிராமணர் அல்லாத 6 பேரை அர்ச்சகர் ஆக்கியதற்கு பாராட்டு தெரிவிப்பதற்காகவும் கேரள முதல்வரை சந்தித்தேன்.

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணுமாறும் மூணாறு பகுதியில் வசிக்கும் தமிழர்களான தோட்ட தொழிலாளர்கள் அனைவருக்கும் வீடுகள் கட்டித் தர வேண்டும் என்றும் கோரிக்கைகளை விடுத்து இருக்கிறோம்.

‘மெர்சல்’ பட பிரச்சினையில் தணிக்கை துறையில் மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டியவர்கள்தான் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அவர்களே இதை அனுமதித்து இருக்கிறபோது பா.ஜனதாவைச் சேர்ந்தவர்கள் ஆத்திரப்படுவது ஏன் என்று தெரியவில்லை.

ஜி.எஸ்.டி.யை பா.ஜனதாவின் மூத்த தலைவர்களான சுப்பிரமணியசாமி, யஷ்வந்த் சின்கா ஆகியோர் மிகக் கடுமையாக விமர்சித்து இருக்கிறார்கள்.

இந்திய பொருளாதாரமே அகல பாதாளத்திற்கு சரிந்து விட்டது என்று யஷ் வந்த்சின்கா கடுமையாக விமர்சித்து இருக்கிறார். அவர்களை கண்டிக்காத பா.ஜ.க. தலைவர்கள் நடிகர் விஜய் மீது பாய்வது ஏன் என்று தெரியவில்லை. இது அரசியல் உள் நோக்கம் கொண்டதாகத்தான் தெரிகிறது.

ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றவர்களை பா.ஜ.க. பக்கம் இழுக்க முயற்சிக்கிறார்கள் என்று பொது மக்கள் இடையே பேச்சு உள்ளது. அவர்கள் மசியவில்லை என்ற நிலையில் நடிகர் விஜய்யை குறி வைக்கிறார்கள் என்று கருதுகிறேன். இது ஒரு அரசியல் விமர்சனம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com