

சென்னை:
திருவல்லிக்கேணி அருகே உள்ள பல்லவன்நகர் கூவம் கரையோர பகுதியில் வசித்து வருபவர் மணி (23). கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இவர் திருநங்கையாக மாறி தேவயானி என பெயரை மாற்றிக் கொண்டார்.
எழும்பூர் - தாம்பரம் மின்சார ரெயில்களில் பயணிகளிடம் இவர் காசு பெற்று வாழ்ந்து வந்தார்.
நேற்று இரவு 9.30 மணி அளவில் தனது பாட்டி அஞ்சலையுடன் பல்லவன் இல்ல கூவம் பாலம் மதில் சுவரில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார்.
அப்போது மனவிரக்தியில் குடிபோதையுடன்பேசிக் கொண்டு இருந்தார். அவருக்கு பணக்கஷ்டம் இருப்பதால் தனது பாட்டி அஞ்சலை ரூ.1000 தருவதாக ஆறுதலாக கூறினாராம். அதையும் மீறி தேவயானி கூவம் ஆற்றில் திடீரென குதித்தார். உடனே தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
எழும்பூர் திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த தீயணைப்புவீரர்கள் விரைந்து வந்து கூவம் ஆற்றில் குதித்த தேவயானி உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், உடல் கிடைக்கவில்லை. இன்றும் உடலை தேடும்பணி நடந்து வருகிறது.
இது குறித்து சிந்தாதிரி பேட்டை போலீசார் வழக்குப் பதிவுசெய்தனர். திருநங்கை தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.