

புவனேஸ்வர்:
ஓடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஆசிய தடகள போட்டிகள் வரும் 6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் உட்பட 45 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கணைகள் கலந்து கொள்கின்றனர். இப்போட்டியில் பங்கேற்கும் பாகிஸ்தான் நாட்டின் தடகள வீரர்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்து விசா வழங்கியது.
இந்நிலையில், தடகள போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் நேற்றிரவு புவனேஸ்வர் விமான நிலையம் வந்தடைந்தனர். தடகள வீரர்களுடன் வந்துள்ள பாகிஸ்தான் தடகள கூட்டமைப்பின் தலைவர் அக்ரம் சாஹி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ”இந்தியா வந்தடைந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது, பாகிஸ்தான் வீரர்கள் தடகள போட்டியில் பங்கேற்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்த இந்திய தடகள கூட்டமைப்புக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்” எனக் கூறினார்.
இந்த வருடம் இந்தியாவில் நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியிலும், ஆசிய ஸ்னூகர் சாம்பியன்ஷிப் போட்டியிலும் விளையாட பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்கப்படவில்லை. இதன் காரணமாக அவர்கள் மேற்கண்ட போட்டிகளில் பங்கேற்கவில்லை. கடந்த வருடம் டிசம்பரில் லக்னோவில் நடைபெற்ற ஜூனியர் ஹாக்கி உலக கோப்பையிலும் பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்கப்படாததால் அவர்கள் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.