

இஸ்லாமாபாத்:
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே தீவிரவாதம், எல்லை விவகாரம் ஆகிய பிரச்சனைகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக இரு நாடுகள் இடையே அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை. பல்வேறு உச்சி மாநாடுகளில் இரு நாடுகளின் பிரதமர்கள் கலந்து கொண்டாலும், மேற்கண்ட விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை.
இந்நிலையில், பாகிஸ்தான் பாராளுமன்ற செனட் சபையில் அந்நாட்டு ராணுவ தலைமை தளபதி ஜாவீத் பஜ்வா பிராந்திய பாதுகாப்பு குறித்து நேற்று பேசினார். செனட் சபையில் ராணுவ தளபதி பேசுவது அரிதான நிகழ்வாகும்.
இந்தியாவுடனான பிரச்சனைகளை போருக்கு பதிலாக நாம் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கலாம். இந்த சூழ்நிலையில், இந்தியா உடன் பேச அரசு முடிவெடுத்தால் அதற்கு ஆதரவாக ராணுவம் நிற்கும். இந்தியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அனைத்து அண்டை நாடுகளுடன் நல்லுறவை பேண பாகிஸ்தான் விரும்புகிறது என்று ஜாவீத் தனது பேச்சில் குறிப்பிட்டார்.