முத்தலாக் மசோதா மீது மக்களவையில் நாளை விவாதம்- பாஜக எம்பிக்கள் ஆஜராக கொறடா உத்தரவு

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட முத்தலாக் சட்ட மசோதா நாளை விவாதத்திற்கு வர உள்ளதால் பா.ஜ.க. எம்.பி.க்கள் அனைவரும் தவறாமல் ஆஜராகுமாறு கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார். #tripletalaq #tripletalaqBill
முத்தலாக் மசோதா மீது மக்களவையில் நாளை விவாதம்- பாஜக எம்பிக்கள் ஆஜராக கொறடா உத்தரவு
Published on

புதுடெல்லி:

முஸ்லிம் மதத்தினரிடையே மனைவியை கணவர் திடீரென்று விவாகரத்து செய்யும் முத்தலாக் முறையை தண்டனைக்குரிய குற்றமாக கருதும் முத்தலாக் சட்ட மசோதாவை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. முஸ்லீம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடரின்போது மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. 

ஆனால், மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை பலம் பாஜக அரசுக்கு இல்லை. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் அங்கு முடங்கிவிட்டது.

எனவே, அவசர சட்டம் மூலம் இந்த மசோதாவுக்கு உயிரூட்டும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டது. இதற்காக சில திருத்தங்கள் செய்யப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுடன் கடந்த 19-9-2018 அன்று அவசர சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது. ஆனால், ஜனாதிபதியால் பிறப்பிக்கப்பட்ட எந்தவொரு அவசர சட்டமும் ஆறுமாத காலத்துக்குள் பாராளுமன்றத்தின் ஒப்புதலை பெற்று சட்டமாக நிறைவேற்றப்பட வேண்டும். 

எனவே, தற்போது நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத் தொடரில் முத்தலாக் சட்ட மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இதற்காக மக்களவையில் கடந்த வாரம் திங்கட்கிழமை முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீது நாளை (27-ம் தேதி) விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், பா.ஜ.க.வை சேர்ந்த எம்.பி.க்கள் அனைவரும் நாளை பாராளுமன்றத்தில் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என அக்கட்சியின் பாராளுமன்ற ‘கொறடா’ நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தார். 

இதைத்தொடர்ந்து, நாளை பாராளுமன்றத்தில் வெடிக்கப்போகும் சர்ச்சை என்னவாக இருக்கும்? என அரசியல் நோக்கர்கள் புருவங்களை உயர்த்தியவாறு, பரபரப்படைந்தனர். சில திருத்தங்களுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள முத்தலாக் மசோதாவின்மீது காரசாரமான விவாதம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த முறையும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை என்றால் இந்த அவசர சட்டத்தை மேலும் 6 மாதகாலம் நீட்டிக்குமாறு ஜனாதிபதியை மத்திய அரசு வலியுறுத்தவும் வாய்ப்புள்ளது, குறிப்பிடத்தக்கது. #tripletalaq  #tripletalaqBill #tripletalaqordinance #LokSabha

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com