அ.தி.மு.க.வில் சேர தங்க தமிழ்செல்வனுக்கு ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் எதிர்ப்பு

அ.தி.மு.க.வில் சேர தங்க தமிழ்செல்வனுக்கு ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தேனி, கரூர் மாவட்டங்களில் எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளன.
அ.தி.மு.க.வில் சேர தங்க தமிழ்செல்வனுக்கு ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் எதிர்ப்பு
Published on

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பிளவுபட்ட அ.தி.மு.க.வில் தினகரன் அணியின் பக்கம் 18 எம்.எல்.ஏ.க்கள் சென்றனர். இதில் தினகரனுக்கு மிகவும் பக்க பலமாக விளங்கிய தங்க தமிழ்செல்வனுக்கு கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர், மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

பாராளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிட்ட தங்க தமிழ்செல்வன் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். அதன் பிறகு தங்கதமிழ் செல்வனுக்கும் டி.டி.வி. தினகரனுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் வெடிக்கத் தொடங்கியது.

2 நாட்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் வெளியான தங்கதமிழ் செல்வனின் ஆடியோ மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து டி.டி.வி. தினகரன் அவரை கட்சியில் இருந்து நீக்கப்போவதாக அறிவித்தார்.

இதனையடுத்து தங்க தமிழ்செல்வன் அ.தி.மு.க.வில் இணையப்போவதாக தகவல் வந்தது. ஜெயலலிதா இருந்த போதே தேனி மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வமும், தங்கதமிழ்செல்வனும் இரு துருவங்களாக செயல்பட்டு வந்தனர்.

தினகரன் அணியில் இருந்த தங்க தமிழ்செல்வன் ஓ.பி.எஸ்.க்கு எதிராக கடுமையான பிரசாரங்களை செய்து வந்தார். எனவே அவரை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்க்க ஓ.பி.எஸ். மற்றும் அவரது மகன் முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். அதனால்தான் தங்கதமிழ் செல்வன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் மூலம் அ.தி.மு.க.வில் சேர தூது விட்டுள்ளார்.

தங்கதமிழ்செல்வனை அ.தி.மு.க.வில் சேர்ப்பதற்கு தேனி மாவட்ட தொண்டர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து அ.தி.மு.க. நிர்வாகிகள் தெரிவிக்கையில், தேர்தல் நேரத்தில் அ.ம.மு.க.வுக்கு வாக்களிக்காவிட்டாலும் பரவாயில்லை. தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் என தங்க தமிழ்செல்வன் கூறி வந்தார்.

அ.தி.மு.க.வை அழிப்பேன் என்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்தின் தனிப்பட்ட வி‌ஷயங்களை பிரசாரம் செய்து அவரை தோற்கடிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.

எனவே அவர் மீண்டும் அ.தி.மு.க.வுக்கு வந்தால் பகை உணர்வே தொட ரும். இது கட்சிக்கு நல்லதல்ல என்றனர்.

தங்க தமிழ்ச்செல்வனை அ.தி.மு.க.வில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி, கரூர் மாவட்டங்களில் போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளன. தங்க தமிழ்ச்செல்வனை அ.தி.மு.க.வில் சேர்க்க ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்பதால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்க தமிழ்ச்செல்வனை தி.மு.க.வுக்கு இழுக்கவும் முயற்சி நடக்கிறது.

தி.மு.க. எம்.எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி, தங்கதமிழ் செல்வனுடன் இதுகுறித்து பேசி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

எனவே அ.தி.மு.க.வுக்கு செல்வதா? அல்லது தி.மு.க.வுக்கு செல்வதா என்பதை சில நாட்கள் கழித்தே முடிவை அறிவிக்க தங்க தமிழ்செல்வன் திட்டமிட்டுள்ளார். தற்போது கேரளாவில் உள்ள தனது எஸ்டேட்டில் தங்கி தனக்கு நெருக்கமான ஆதரவாளர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com