ஆரணி அ.தி.மு.க.வில் பரபரப்பு: அமைச்சருடன் ஓ.பி.எஸ். ஆதரவாளர் வாக்குவாதம்

ஆரணியில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுடன் ஓ.பி.எஸ். ஆதரவாளர் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆரணி அ.தி.மு.க.வில் பரபரப்பு: அமைச்சருடன் ஓ.பி.எஸ். ஆதரவாளர் வாக்குவாதம்
Published on

ஆரணி:

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனின் சொந்த தொகுதியான ஆரணியில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் தனித்தனி கோஷ்டிகளாக செயல்பட்டு வருகின்றனர்.

அமைச்சர் தலைமையில் இ.பி.எஸ். ஆதரவாளர்களும், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பொருளாளரான சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்களும் உள்ளனர்.

அரசு நிகழ்ச்சிகளில் இ.பி.எஸ். ஆதரவாளர்கள் தங்களுக்கு உரிய மரியாதை, அங்கீகாரம் கொடுப்பதில்லை என்று ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ். இருப்பதால் கட்சியின் மேல் மட்டத்தில் அவருடைய ஆதரவாளர்களுக்கு முக்கியத்துவம் கிடைப்பதாகவும், துணை ஒருங்கிணைப்பாளராக இ.பி.எஸ். இருப்பதால் தங்களுக்கு அதிக முக்கியத்துவம் கிடைப்பதில்லை என்றும் இ.பி.எஸ். ஆதரவாளர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், ஓ.பி.எஸ். ஆதரவாளரான மாவட்ட பொருளாளர் சுபாஷ் சந்திர போஸ், அமைச்சருடன் நேரடியாக வாக்குவாதம் செய்ததால் ஆரணி அ.தி.மு.க.வில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆரணி பஸ் நிலையம் அருகே வைக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் சிலைகளுக்கு அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அமைச்சர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் இ.பி.எஸ். ஆதரவாளர்கள் மட்டுமே பங்கேற்றனர். ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் ஒருவர் கூட பங்கேற்கவில்லை.

இதையடுத்து, ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி ஆரணி அருணகிரி சத்திரத்தில் நடந்த இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சிக்கு அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் சென்றபோது, மாவட்ட பொருளாளர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் அங்கு இருந்தனர்.

அப்போது, ஓ.பி.எஸ். ஆதரவாளர் சுபாஷ் சந்திர போஸை பார்த்து சிலைகளுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு ஏன் வரவில்லை என்று அமைச்சர் கேட்டார். அதற்கு, உங்கள் ஆதரவாளர்கள் யாரும் எங்களுக்கு தகவல் கொடுப்பதில்லை என்று கூறி அமைச்சருடன் சுபாஷ் சந்திர போஸ் கடும் வாக்குவாதம் செய்தார்.

பதிலுக்கு இ.பி.எஸ். ஆதரவாளர்களும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் வேட்டி, சேலை பெற வந்திருந்த பொதுமக்கள் நிகழ்ச்சி நடைபெறுமா? நடைபெறாதா? என்று நினைத்தபடியே வாக்கு வாதத்தை வேடிக்கை பார்த்தனர்.

பிறகு அமைச்சர் சமாதானத்தை தொடர்ந்து ஒரு வழியாக இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் அமைதியடைந்தனர். இதையடுத்து இலவச வேட்டி, சேலைகளும் வழங்கப்பட்டது. இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com