நாசிக்கில் மூன்றாவது நாளாக வெங்காய சந்தைகள் அடைப்பு

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் வெங்காய வியாபாரிகள் வீட்டில் நடைபெற்ற சி.பி.ஐ. சோதனைக்கு கண்டனம் தெரிவித்து 3-வது நாளாக வெங்காய சந்தைகள் மூடப்பட்டுள்ளன.
நாசிக்கில் மூன்றாவது நாளாக வெங்காய சந்தைகள் அடைப்பு
Published on: 

மும்பை:

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் வெங்காய வியாபாரம் மிக அதிக அளவில் நடந்து வருகிறது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு தினமும் இங்கிருந்து பல கோடி ரூபாய் மதிப்புக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. நாசிக்கில் உள்ள “லசல்கான் வேளாண் உற்பத்தி சந்தை” இந்தியாவிலேயே மிகப்பெரிய வெங்காய மார்க்கெட்டாக கருதப்படுகிறது.

கடந்த வியாழக்கிழமை வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென நாசிக் மாவட்டத்தில் உள்ள 7 வெங்காய வியாபாரிகளின் வீடுகள், கடைகள், குடோன்களில் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குடோன்களில் விதிகளை மீறி முறைகேடாக வெங்காய மூட்டைகள் நிறைய பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. இதையடுத்து அந்த வெங்காய குடோன்களுக்கு “சீல்” வைக்கப்பட்டது. 7 வெங்காய வியாபாரிகளில் 2 வெங்காய வியாபாரிகள் தான் குறிப்பிடத்தக்கவர்கள். அவர்களது வீடுகளில் இருந்து ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

வருமான வரித்துறை அதிகாரிகளின் திடீர் சோதனையால் நாசிக் மாவட்டத்தில் நேற்று வெங்காய ஏலம் மற்றும் வெங்காய விற்பனை நடைபெறவில்லை. இதன் காரணமாக வெங்காயம் விலையில் நேற்று 35 சதவீதத்துக்கு திடீர் வீழ்ச்சி காணப்பட்டது.

கடந்த சில மாதங்களாக வெங்காய மொத்த விலை உயர்ந்ததால், நாசிக் சந்தையில் கிலோவிற்கு 10 ரூபாயிலிருந்து 30 ரூபாயாக உயர்ந்தது. மற்ற பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகளில் வெங்காயம் கிலோ 40-50 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் நாசிக் சந்தைகளில் ஒரு குவிண்டால் வெங்காயம் ரூ.2500-க்கு விற்றது. வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்குப் பிறகு ஒரு குவிண்டால் வெங்காயம் ரூ. 900-க்கு குறைந்தது.

இந்நிலையில், வெங்காய வியாபாரிகள் வீட்டில் நடைபெற்ற சி.பி.ஐ. சோதனைக்கு கண்டனம் தெரிவித்து சந்தை வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏலம் எடுக்க எந்த வியாபாரியும் முன்வரவில்லை. மூன்றாவது நாளாக இன்றும் கடைகள் அடைக்கப்பட்டதால் மார்க்கெட்டுகள் வெறிச்சோடி காணப்பட்டன. நாடு முழுவதும் வெங்காய வியாபாரம் வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால் வெங்காய விலை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த பிரச்சனை குறித்து வெங்காய வியாபாரிகளிடம் ஆலோசனை செய்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என லசல்கான் வேளாண் உற்பத்தி சந்தை கமிட்டியின் தலைவர் ஜெய்தத் கோல்கர் தெரிவித்தார்.

X