ஓமலூர் அருகே தனியார் நிறுவனத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான செம்பு பொருட்கள் கொள்ளை

ஓமலூர் அருகே தனியார் நிறுவனத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான செம்பு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை
கொள்ளை
Published on

ஓமலூர்:

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கோட்டகவுண்டம்பட்டி பகுதியில் தனியாருக்குச் சொந்தமான ஹைடெக் என்ற இரும்பு பிரித்தெடுக்கும் கம்பெனி உள்ளது. இந்த கம்பெனி கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. நிறுவனத்தின் உரிமையாளர் வெங்கடபதி இறந்த பின் நிர்வாக பிரச்சினையின் காரணமாக நஷ்டம் அடைந்ததால் கடந்த 7 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது.

மேலும் வங்கி கடனுக்காக இந்த நிறுவனம் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தனியார் கம்பெனி சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக கம்பெனி மூடப்பட்டுள்ளதால் வனம்போல் காணப்படுகிறது. மேலும் மூடப்பட்டுள்ள தனியார் கம்பெனிக்கு இரவு 11 பேர், பகல் 11 பேர் என 22 பேர் காவலாளிகளாக பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு 11 காவலாளிகளும் பணியில் இருந்தனர். அப்போது அங்கு ஒரு லாரி வந்தது. லாரியில் இருந்து சுமார் 20 பேர் கொண்ட கும்பல் இறங்கி ஓடிவந்தது.

அவர்கள் கத்தி மற்றும் வீச்சரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருந்தனர். கம்பெனிக்குள் வந்ததும் அந்த கும்பல் பணியில் இருந்த 11 கவலர்களை சுற்றி வளைத்து கட்டிபோட்டனர். பின்பு அவர்களை அங்குள்ள தனி அறையில் அடைத்தனர்.

தொடர்ந்து தனியார் கம்பெனிக்குள் நுழைந்த கும்பல் மின் சாதனத்தில் டிரான்ஸ்பார்மர்ஸ் உள்ளிட்ட மின் சாதனப் பொருட்களில் பலகோடி மதிப்பிலான காப்பர் கம்பிகளை திருடினர். 5 மணி நேரத்துக்கும் மேலாக அங்கேயே நின்று கொள்ளையடித்தனர். அறையில் இருந்த காவலாளிகள் போலீசார் மற்றும் ஊர் மக்களுக்கு தொடர்புகொள்ள முயற்சித்தனர்.

உடனே கொள்ளையர்கள் ஆயுதங்களை காட்டி அவர்களை மிரட்டினர். பின்பு கொள்ளை கும்பல் காப்பர் கம்பிகளை அள்ளிக்கொண்டு சென்றனர். இதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என தெரிகிறது. இதுபற்றி தகவல் அறிந்த ஓமலூர் மற்றும் கருப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்பு அவர்கள் அறையில் அடைக்கப்பட்டிருந்த காவலாளிகளை மீட்டனர். இதனிடையே சம்பவம் நடைபெற்ற இடம் குறித்த எல்லை பிரச்சினை காரணமாக 2 காவல் நிலைய போலீசார் விசாரிக்க தயக்கம் காட்டி வருகின்றனர்.

உரிய விசாரணை நடத்தி கொள்ளை கும்பலை மடக்கி பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். சினிமாவை மிஞ்சும் வகையில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் ஓமலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com