சேலம் கோர்ட்டில் முதியவர் தீக்குளிக்க முயற்சி

வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க கோரி சேலம் கோர்ட்டில் முதியவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீக்குளிக்க முயற்சி
தீக்குளிக்க முயற்சி
Published on

சேலம்:

சேலம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள எஸ்.பாப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பச்சையப்பன் (வயது 65.) இவர் இன்று காலை 10 மணி அளவில் சேலம் அஸ்தம்பட்டி அருகே உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு வந்தார்.

பின்னர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதி தேவதையின் சிலை அருகில் சென்ற பச்சையப்பன் தான் உடன் எடுத்து வந்திருந்த மண்எண்ணை பாட்டிலை திறந்து அவர் மீது ஊற்றி தீ வைக்க முயன்றார்.

இதை பார்த்த நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் அங்கிருந்த காவல்துறையினர் மண்எண்ணை பாட்டிலை பறித்து முதியவரை காப்பாற்றினர். பிறகு முதியவர் பச்சையப்பன் அஸ்தம்பட்டி காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது:-

எனது நிலம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சுமார் 20 வருடத்திற்கு மேலாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வரும் நிலையில் வழக்கின் முக்கிய ஆவணங்கள் மாயமாகி விட்டதாக தெரிவித்துள்ளனர். இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு விசாரணை விரைந்து முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார் .

X

Maalai Malar
www.maalaimalar.com