

புவனேஸ்வர்:
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு 4600க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த வைரஸ் பரவத் தொடங்கிய சீனாவில் இப்போது பாதிப்பு மற்றும் இறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ள நிலையில், மற்ற நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.
இந்தியாவில் கொரோனா வைரசுக்கு இதுவரை 76 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அவ்வகையில், ஒடிசா அரசு கொரோனா வைரசை, மாநில பேரிடராக பிரகடனம் செய்திருப்பதாக முதல்வர் நவீன் பட்நாயக் சட்டசபையில் தெரிவித்தார். மேலும் கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகளுக்காக அரசு 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.
‘கொரோனா அச்சம் காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களும் வரும் 31-ம் தேதிவரை மூடப்படும். தேர்வு எழுதுவோருக்கு இந்த விடுமுறை பொருந்தாது. சினிமா தியேட்டர்கள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி கூடங்கள் அனைத்தும் 31ம் தேதி வரை மூடப்படும். அத்தியாவசியமற்ற கருத்தரங்குகள், செமினார்கள் மற்றும் மாநாடுகளை ரத்து செய்ய வேண்டும்.
சமூகக் கூட்டங்கள், மத நிகழ்ச்சிகள் மற்றும் திருமண விழாக்கள் போன்ற மக்கள் கூடும் நிகழ்ச்சிகளை உள்ளூர் அதிகாரிகள் கட்டுப்படுத்த வேண்டும்’ எனவும் முதல்வர் தெரிவித்தார்.
இதனையடுத்து சட்டசபை கூட்டத் தொடர் மார்ச் 29ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.